Skip to main content

கலியாணமாம் கலியாணம்!

"கண்ணு.....நான் நேத்துதான் சித்தநாயக்கம்பாளையம் வள்ளுவன்கிட்ட
போயுருந்தனா...அவுங்க கொசவந்தோட்டத்துல இருக்குற புத்துங்கண்ணுக்கு
வாரமொருக்கா பாலூத்தச் சொன்னாங்கோ...! எண்ணி ஒரே மாசத்துல காரியம்
முடியுமுங்குறான் அந்த வள்ளுவன்.." மகளிடம் சொன்னாள் சானகி.



பாலும் ஊத்தியாயிற்று.


"பொண்ணு லட்சணமாத்தான் இருக்குது. ஆனா படிப்பு பத்தாதுங்கறார்
மாப்பிள்ளை.." தரகர் சொன்ன சேதி கேட்டு நொந்து போனாள் சானகி. மாதமும்
கழிந்தது.



"சத்திக்குட்டி.....அந்த வள்ளுவங்கிட்ட மறுக்கா ஒரு தாட்டி போயிருந்தேன். ஏதோ
ராகு தோஷமிருக்குதாமா........திருநாகேஸ்வரம் போயி இராகு பகவானுக்கு
"பாலாபிஷேகம் " பண்ணினா தோஷமெல்லாம் போயிருமாமாம். எப்ப போலாம்?"


திருநாகேஸ்வரமும் போய் வந்தாயிற்று.



"மாப்புளைக்கு பொண்ணைப் பிடிச்சுருக்காம். அவுங்கம்மா எத்தன பவுனு
போடுவீங்கன்னு கேட்டாங்க. " மேற்காலவூட்டு ரங்கண்ணன் கேட்டார்.


"அவியள கேட்டுட்டு பொழுதுக்குள்ள சொல்றேனுங்கண்ணா " சொன்னாள் ஜானகி.


"ஏனுங்க... , திருநாகேஸ்வரம் போய்ட்டு வந்தவுடனே வரன் அமையுமுன்னு சோசியன் சொன்னாருல்ல.....கடன வுடன வாங்கியாவது இந்தக் கலியாணத்த முடிக்கோணும். ஆவுணி வந்தா வயசு 28 ஆகுது. வயசுப் பொம்பளைய வூட்ல வெச்சிட்டு அக்கம்பக்கத்து ஆளுங்க பேச்சத் தாங்க முடியல. எத்தன பவுனு போட முடியும்னு நம்ம ரங்கண்ணன் கேட்டாருங்க...."

"இவுளுக்கப்புறம் ஒரு ஆம்பளப் புள்ளையிருக்குது சானகி. ஆனாலும்
சத்திக்குட்டிக்கும் வயசாகுது. அதனால என் சக்திக்கு மீறினாலும் கடன வுடன வாங்கி ஒரு 25 பவுனு போடேறேன்னு சொல்லிடு"

"25 பவுனுன்னா ஆகாதுங்கறாங்கோ. புதுசா ஏதோ பிளசரு காரு "உண்டாயோ " என்னமோ அதும் , 50 பவுனும் போட்டா உடனே நிச்சியம் பண்ணிக்கலா முங்கறாங்கோ மாப்ளை ஊட்டுக்காரங்க. " ரங்கண்ணன் சொன்னார்.


வியாபாரம் படியவில்லை. நொந்து போனாள் ஜானகி.......


***


காளிம்மா சொன்னார் என நாட்ராயன் கோயிலுக்கு செவ்வாக்கெழம , செவ்வாக்கெழம போயி சாமி கேட்டுட்டும் வந்தாச்சி. மாரியாத்தா கோயிலுக்கு
வாரமொருக்கா எட்டு நெய் வெளக்கு ஏத்தியும் வெச்சி வாரம் அஞ்சாகுது.


"ஏனுங்க , இந்த சித்தநாயக்கம்பாளைய சோசியன் சொல்றது நடக்கவே மாட்டீங்குது. அவினாசிப் பக்கம் தெக்கலூருல ஒரு சோசியக்காரன் இருக்கானாமா , சொன்னா பலிக்குதுன்றாங்க. ஒரு எட்டு போயிட்டு வந்துரட்டுமா ? "

"சானகி , அப்பிடியே நம்ம தம்பி சாதகத்தையும் எடுத்துப் போயிட்டு வா..!"

தெக்கலூர் சோசியன் சொன்னான் .

" புள்ள சாதகத்துல ரெண்டுல சனி இருக்குது. இந்த ஆனி மாசத்துக்குள்ள கலியாணம் ஆகலேன்னா , குரு பலன் முடிஞ்சிரும். அப்புறம் ரெண்டு வருசத்துக்கு அப்பறந்தேன் குரு பலன் . அதுனால கொஞ்சம் வெட்டு
வெடுக்குன்னு மாப்பளை பாருங்க. கும்பகோணத்துல இருக்குற திருமணஞ்சேரி"க்கு ஒரு எட்டு போய்ட்டு வந்துடுங்கோ. முடிஞ்சா அம்மிணிக்கு சிம்ம லக்கினம்ங்கிறதால பக்கத்துல இருக்குற சூரியனார் கோயிலுக்கும் ஒரு எட்டு போய்ட்டு வந்துடுங்க"


திருமணஞ்சேரியும் போயாகிற்று , சூரியனார் கோயிலும் போயாகிற்று.


வரன் ஏதும் படிவதாக இல்லை. போகாத தரகனூடில்லை. சூலூர்ல கொங்கு திருமண மண்டபத்துல எழுதி வச்சா நெறைய வரன் வருதாம். சானகி சத்திக்குட்டியையும் கூட்டிக் கொண்டு போயி எழுதி வைத்துவிட்டு வந்தாள்.


"ம்ஹூம்" ஒரு பலனுமில்லை. பரிகாரங்களாலும் , புதுப்புதுக் கோயில்களாலும்
அடுத்த சில வருடங்கள் கழிந்தன.


****


கழியும் ஒவ்வொரு நாளும் வீட்டுக்குத் தான் பாரமென்ற நினைவுடனே குலைந்து போனாள் சத்திக்குட்டி. ஓவ்வொரு காலையும் தெருவோரப் பிள்ளையாருக்கு ஈரத்தலையுடன் தண்ணீர் ஊற்றும் போதும் ஏதாவது இடியோ , மின்னலோ தன்னை வந்து கொண்டு போய் விடாதோ , இந்த உலகத்தை விட்டு விடைபெற்று விடலாம் என்ற அளவில் சிந்திக்க ஆரம்பித்திருந்தாள் சத்திக்குட்டி.


ஒரு சுபயோக சுபதினத்தில் ,ஊருக்கு வரும் மினி பஸ்ஸின் ஓட்டுநரை கருமத்தம்பட்டி சென்னியாண்டவர் கோயிலில் கரம் பிடித்தாள் சத்திக்குட்டி.
வீட்டின் முன் மாலையும் , கழுத்துமாக வந்து நின்ற சத்திக்குட்டியை நோக்கி
உச்சஸ்தாயியில் கத்திக்கொண்டிருந்தார் அப்பா.


"காதல் பண்ணறேன்னு எவனையோ கூட்டிட்டு வந்திருக்கியே , நீ குடியானவன்
ஊட்டுப் புள்ளையாடீ ? என் குடும்ப மானத்தைக் கெடுத்த வந்தவளே.
இதுக்காகத்தானா உன்னப் பெத்தேன் ? . எங்காச்சும் போயிடு , எங்கண் முன்னாடி
நிக்காதே...இனி நீ யாரோ , நான் யாரோ.....! இன்னியோட தலை முழுகிட்டேன்
உன்னை..!"


அமைதியாக கண்ணில் நீர் வடிய நின்று கொண்டிருந்தாள் சானகி. அந்தக் கண்ணீருக்கு தாய்மைக்கே உண்டான ஆயிரம் அர்த்தங்கள்....!

Popular posts from this blog

பூட்டிய இரும்புக்கூட்டின் கதவு திறக்கப்பட்டது!

சீமான்களின் சபையினிலேயே , கடிதம் எழுதி எழுதிக் களைத்துப்போனதோர் கிழட்டுச் சிங்கம்.....முன்னாலுக்கும் முன்னால் அவர் கொண்ட தமிழ்ப்பற்று.....இன்னாளில் அது தமது மக்கட்பற்றாய் மாறிப்போனதொரு சோகம். ஏதோவொரு புண்ணியத்தில், எவரோ செய்த வரலாற்றுத் தவறால் , கொள்கை , தொலைநோக்கு , மக்கட்பற்று இவை பற்றிய சிந்தையேதுமின்றி அரசியலில் விபத்தாய் விளைந்த கொடநாட்டு ஈழத்தாய்....தேர்தலுக்குத் தேர்தல் மட்டுமே தமிழர் பற்றியும் , தமிழர் அரசியல் பற்றியும் எழுதி வைத்துப் பேசும் செல்வி யவர்.........இன்னமும் அவர் சேலை பிடித்துத்திரியும் வீணர் கூட்டம்.! கூட்டணிக்கேற்றப்படி கொள்கையை மாற்றிக்கொள்ளும் மருத்துவப் படையாச்சி.........வீரமிகு வன்னியகுலத்திலே வந்துதித்த சந்தர்ப்பவாதச் சாக்கடை....சமரசமற்ற கொள்கை அரசியலை சந்தர்ப்பவாதச் சாக்கடைக்குள் தள்ளிய பெருமைக்குரிய மருத்துவர் தமிழ்க்குடிதாங்காத தமிழ்க்குடிதாங்கி! யாரை எதற்காக எதிர்த்து அரசியல் செய்யவேண்டுமே அவர்களோடே தம் தேவைக்குதந்த படி கூட்டு வைத்துக்கொண்டு ஈழத்திற்க்காய் எந்நேரமும் பாடுபடும் திரு.வைகோ அவர்கள்....அவரும் சிறை சென்றார்....

இதற்குத்தானா ஆசைப்பட்டீர்கள் திரு.சீமான்?

இன்று சீமான் அதிமுக கூட்டணியில் இருந்து பிரச்சாரம் பண்ணப்போவதாக ஒரு செய்தி வந்திருக்கிறது..ஏற்கெனவே ஒருமுறை செய்த பாரிய தவறொன்றை மற்றொருமுறை செய்யமாட்டார் என்றே நினைத்திருந்தேன்....இது உண்மையான செய்தியாய் இருந்தால் பேரிடிதான்..!!!! மாறாக உணர்வுள்ள இளைஞர்கள் தம் பின்னால் பேரெழுச்சியுடன் நாம் தமிழராய் எழும்போது.....அதைக்கொண்டுபோய் போய்ஸ்தோட்டத்திற்கு தாரைவார்த்துக்கொடுப்பதென்பது கனவிலும் சகிக்க முடியாத செயல்....!!  கருணாநிதிக்கு ஈழ அழிவிற்கு எவ்வளவுக்கெவ்வளவு பங்கிருக்கிறதோ அதே அளவிற்கு  சக பங்குள்ளவரே செயலலிதா... செயலலிதா என்ன செய்திருக்க வேண்டும்? என்ன செய்தார்? 1.எதிர்கட்சியாக மாபெரும் போராட்டங்களை நடாத்தியிருக்க வேண்டும்...அழிவது நம்சொந்தங்களே என்று தெரிந்திருந்தும் வாய்மூடி மெளனியாகவே இருந்தார். 2. கருணாநிதியின் எதிர்ப்பரசியலைக் கைவிட்டு விட்டு முத்துக்குமார் முதற்கொண்டு  தமிழக இளைஞர்களின் எழுச்சியை உபயோகித்து இந்திய அரசை ஸ்தம்பிக்க முயற்சித்திருக்க வேண்டும்....அதைவிடுத்து கொடநாட்டில் பள்ளி கொண்டிருந்தார்... 3.  சிறிதேனும் உண்மையான அக்கறை அவருக்கு தமிழர்பா...

நண்பர் 'டோண்டு' ராகவன்...

உயிரோடு இருக்கும்வரை அறிக்கைகளால் அர்சித்து எதிர்ப்பரசியல் நடாத்தி செத்துபோன பிறகு ஆருயிர் நண்பர் என்று அழைத்துக்கொள்ளும் எல்லா அரசியல்வாதிகளையும் போலவே நான். எனக்கும் மறைந்த உயர்திரு 'டோண்டு' ராகவன் அவர்களுக்குமான பரிச்சயம் அவ்வளவொன்றும் அதிகமில்லைதான். பதிவுலகையும் , பர்ஸனல் லைப்பையும் பிரித்து வைத்துக்கொள்ளும் எண்ணமுடைய நான் , டோண்டு மட்டுமல்ல மற்றபல பதிவுலக நண்பர்களுடனும் கூட தனிப்பட்ட தொடர்புகளை வைத்துக்கொண்டதில்லை... இருந்தாலும் , அவ்வப்போது பதிவுலக பின்னூட்டங்களின்பாலே தொடர்ந்துகொண்டிருந்த தொடர்பு , எனது 'போலி டோண்டு' பற்றிய கட்டுரையொன்றிலேயே  தீவிர விவாதமாக மாறியது.. ஆயிரம் விமர்சனங்கள் அவர் மீதோ இல்லை அவர்தம் பிற்போக்கான கருத்துக்கள் மீதோ இருந்திருக்கலாம். கடினமாக ஓரிரு முறை பேசியிருக்கலாம்.. அத்தனையும் தாண்டி அவர் மிக நல்ல மனிதர் , கடும் உழைப்பாளி என்பதை அவரது பதிவுலகம் மூலமாக அறிந்தவனெனினும் உறுதியாக கூறவியலும்.. அத்தகைய நல்ல மனிதரை இழந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கும் , நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்... வருத்தங்கள...