Skip to main content

மீள்தல்…

முன்பு மதிபாலா பக்கங்கள் என்ற தலைப்பில் இன்னொரு வலைப்பூவில் பெரும்பாலும் அரசியலைப் பற்றி அலசிக்கொண்டிருந்தேன்......சலிப்புத் தட்டியதாலும் , நேரமின்மையாலும் வலைப்பூக்களிலிருந்து அனேகமாக ஒரு வருடம் விலகியே இருந்தேன்....

தற்போதைக்கு , உணர்வுகளுக்கு வடிகாலென எப்போதாவது எழுதலாம் என தீர்மானித்திருக்கிறேன்.... இவ்வலைப்பூவை "எழுதியதும் , டைப்பியதுமென பெயரிட்டு மீள்கிறேன்...!

இனி அவ்வப்போது சந்திப்போம்…நன்றி.!

***

வாழ்வில் நாம் பல பேரைச் சந்திக்கிறோம். சிலரை எப்போதும் நினைவில் வைத்துக்கொள்கிறோம் , பலரை எப்போதாவது….

வாழ்வின் சில நொடிகள் மட்டுமே வந்து போகும் பலரைக் கூட எப்போதாவது பார்த்த நினைப்புத் தோன்றும் எனக்கு….மற்றபடி இந்த அவசர உலகில் காலம் அனைத்தையும் கடந்து போகச் செய்கிறது….நாம் கடந்து போன முகங்களையும் தான்..


இது நம்மைத் தூக்கி வளர்த்த ஆத்தாவாக இருக்கட்டும் , இல்லை ஆயாவாக இருக்கட்டும்…சிறுவயதில் வீட்டுவேலை செய்யும் வேலைக்காரியிலிருந்து , காரிய நிமித்தமாக வெகு தொலைவானதொரு ஊரில் பார்த்தவர்களாக இருக்கட்டும்…

பார்த்தவர்களென்றில்லை ,கேள்விப்பட்டவர்களும் , வாசித்தவர்களும் அதில் அடக்கம்.!

அவர்களில் ஒரு சிலரை இம்மீள்தல் பதிவில் நினைவு படுத்திக்கொள்கிறேன்.

***


கண்ணாள்…

நாங்கள் வசித்ததும் , வசித்துக்கொண்டிருப்பதும் நகரத்துக்கும் , கிராமத்துக்கும் நடுப்பட்டதொரு ஊர். அருகிலிருந்த நகரமொன்றில் சமையல் காண்டிராக்டர் ஒருவரிடம் வேலை பார்த்த கண்ணாள் , எங்கள் வீட்டிற்கு ஆஸ்தான சமையல்காரர். எந்த விசேடமாக இருந்தாலும் சரி அவர்தான் சமையல்…


குறிப்பு

இப்போது அவர் என்று நான் அவரை அழைத்தாலும் , அப்போதெல்லாம் , வா – போ என்றுதான் அழைப்பதுண்டு. கொங்குச்சீமையில் “வலையர்”களுக்கான மதிப்பு அவ்வளவுதான் “இருந்தது”.

“இருந்தது” என்று சொல்லும் போது அது இறந்த காலம் ஆகிவிடுகிறது…இப்போதும் இருக்கிறதானபடியால் “இருக்கிறது” என்றே சொல்ல வேண்டும்.
ஆகவே கொங்குச்சீமையில் “வலையர்”களுக்கான மதிப்பு அவ்வளவுதான் “இருக்கிறது”.

எப்போது அழைத்தாலும் சலிக்காமல் வந்து எல்லா வேலையும் இழுத்துப்போட்டுக்கொண்டு செய்வார்..எப்போது நான் அம்மாவிடம் அடம் பிடித்து பணத்திற்கு ( முட்டாய் வாங்கத்தான்…..!!) அழுதாலும் , அம்மாவிற்குத் தெரியாமல் காசு கொடுப்பார்….அதனால் எனக்கு அவர் மீது தனிப்பிரியமுண்டு.

கடந்த முறை எனது திருமணத்திற்கு அழைக்கச் சென்ற போது , பக்கவாத நோயால் படுத்திருந்தார்…

உடல் மெலிந்து ,

சாயம் போன நூல்சீலை கட்டி ,

அழுக்குப் போர்வையொன்றில் படுத்திருந்தார்.

இலேசான வெளிச்சம் குடிசையின் தடுக்குகளில் இருக்கும் ஓட்டை வழியே பரவியிருந்தது.

கண்ணீர் மல்க “நல்லா இருக்கீங்களா? “ என்றார்….

“நல்லா இருக்கேங்க….நீங்க எப்படி இருக்கீங்க ? ” என்ற என் குரலுக்கு இலேசான புன்முறுவலித்தார்….ஆனால் அதிலிருந்த வேதனையையும் , காரணத்தையும் என்னால் உணர முடிந்தது….

“ இருக்கேன் சாமி…புள்ள குட்டீக பொழப்ப பாக்க டவுனுக்குப் போயிட்டாங்க…இங்க நா மட்டும் தனியா கெடந்து அல்லாடுறேன்…எப்பவாச்சும் எதுத்தூட்டு “ சுப்பாத்தா “ சோறு கொண்டு வந்து போடும்...உங்களுக்கு கலர் வாங்கிக்கொடுக்க கூட ஆளில்லாமப் போச்சு இங்க…”

தனது சுருக்குப் பையில் முடிந்துவைத்திருந்த ஐந்து ருபாய் நாணய மிரண்டை எடுத்துக்கொடுத்து ,

“உங்க கலியாணத்துக்குத் தான் என்னால சமையல் வேலை செய்ய முடியலை போங்க….உங்க அக்கா சீரு மொதக்கொண்டு இந்தக் கையாலதான் சோறாக்கிப்போட்டேன்……உங்க கல்யாணத்துக்கு என்னால வரக்கூடிய முடியாது…..இதான் என் கையில இருக்கு , மறுக்காம வெச்சுக்கங்கங்க இராசா….” என்றார்..

மறுக்க முடியவில்லை…

வாங்கிக்கொண்டேன்………..

கையிலிருந்த சில ரூபாய்த்தாள்களை அவரிடம் திணித்துவிட்டு வண்டி ஏறினேன் கனத்த இதயத்துடன்....

காலம் தான் மனிதர்களை எப்படி மாற்றிவிடுகிறது பாருங்கள்….



Comments

Popular posts from this blog

இதற்குத்தானா ஆசைப்பட்டீர்கள் திரு.சீமான்?

இன்று சீமான் அதிமுக கூட்டணியில் இருந்து பிரச்சாரம் பண்ணப்போவதாக ஒரு செய்தி வந்திருக்கிறது..ஏற்கெனவே ஒருமுறை செய்த பாரிய தவறொன்றை மற்றொருமுறை செய்யமாட்டார் என்றே நினைத்திருந்தேன்....இது உண்மையான செய்தியாய் இருந்தால் பேரிடிதான்..!!!! மாறாக உணர்வுள்ள இளைஞர்கள் தம் பின்னால் பேரெழுச்சியுடன் நாம் தமிழராய் எழும்போது.....அதைக்கொண்டுபோய் போய்ஸ்தோட்டத்திற்கு தாரைவார்த்துக்கொடுப்பதென்பது கனவிலும் சகிக்க முடியாத செயல்....!!  கருணாநிதிக்கு ஈழ அழிவிற்கு எவ்வளவுக்கெவ்வளவு பங்கிருக்கிறதோ அதே அளவிற்கு  சக பங்குள்ளவரே செயலலிதா... செயலலிதா என்ன செய்திருக்க வேண்டும்? என்ன செய்தார்? 1.எதிர்கட்சியாக மாபெரும் போராட்டங்களை நடாத்தியிருக்க வேண்டும்...அழிவது நம்சொந்தங்களே என்று தெரிந்திருந்தும் வாய்மூடி மெளனியாகவே இருந்தார். 2. கருணாநிதியின் எதிர்ப்பரசியலைக் கைவிட்டு விட்டு முத்துக்குமார் முதற்கொண்டு  தமிழக இளைஞர்களின் எழுச்சியை உபயோகித்து இந்திய அரசை ஸ்தம்பிக்க முயற்சித்திருக்க வேண்டும்....அதைவிடுத்து கொடநாட்டில் பள்ளி கொண்டிருந்தார்... 3.  சிறிதேனும் உண்மையான அக்கறை அவருக்கு தமிழர்பா...

இந்தியாவும் சீனாவும் - ஒரு ஒப்பீடு..!

நிறைய பத்திரிக்கைகளும் , பொருளாதார வல்லுநர்களும் அடிக்கடி இப்படிச் சொல்வதுண்டு. இந்த நூற்றாண்டு இந்தியா மற்றும் சீனாவின் நூற்றாண்டு என்று. வருங்காலத்தில் இந்தியாவும் , சீனாவுமே உலக வல்லரசுகளாகப் போகின்றன என்று. நிலைமை என்ன? இந்தியாவிற்கோ , சீனாவிற்கோ அதற்கான தகுதிகள் இருக்கின்றனவா என்று பார்ப்பதற்கான முதல் படி இந்தியாவும் சீனாவும் ஒப்பீட்டளவில் எப்படி இருக்கின்றன என்பதேயாகும். ஆய்வுகளை அரசியல், பொருளாதார , இராணுவ , இராஜதந்திர , அண்டை நாடுகளுடனேயான உறவுகளினூடாக அணுகலாம். பொருளாதார ஒப்பீட்டில் இந்தியாவும் , சீனாவும் எப்படி இருக்கின்றன என்பதை இப்பதிவில் பார்ப்போம். மற்றைய இராணுவ , இராஜதந்திர உறவுகளை பிரிதொரு சமயம் பார்க்கலாம். உலகின் பெரும்பான்மையான மக்களைக் கொண்ட இருநாடுகளும் உலகப்பொருளாதாரத்தில் பெருமளவு பங்கு வகிக்கின்றமை தவிர்க்க இயலாததே.  இந்தியாவின் தோராய ஜி.டி.பி ( GROSS DOMESTIC PRODUCT) மதிப்பு ( ஜிடிபி என்பது ஒட்டுமொத்த நாட்டின் உற்பத்தி மதிப்பு) 3.5 டிரில்லியன் அமெரிக்க டாலர்கள். ( எத்துணை சைபர் டிரில்லியனுக்கு என்ற ஆய்வை கொஞ்சம் அப்புறமா பாக்கலாம் சார். ) , அதே ச...

"ஜெ" பிரதமரானால்...!!

ஆனாலும் இந்த "சோ" மா(தி)ரி பேச யாருக்கும் வராது... ஒரு விழா அதில் மாங்காய்களை தனக்குத் தோதான முறையில் அடித்துக்கொள்ளப் பார்த்திருக்கிறார்.... முதலில் , பாரதிய ஜனதா கட்சியில் பிரதமர் வேட்பாளராக இருக்கும் இரு போட்டியாளர்களை கூப்பிட்டு வைத்தார். தனக்கு "மோடி" தான் பிரதமர் சாய்ஸ் என்று சொல்லுவதற்கு வாஜ்பாயையும் துணைக்கு அழைத்தார்.......வாஜ்பாயை முன்மொழிந்ததே அத்வானி தான் என்றும் , அதுபோலவே "மோடி" யையும் அத்வானி முன்மொழிய வேண்டுமென்கிறார்... தமிழகத்தில் தனக்கான ஓட்டுவங்கியைப் பெறுக்க சில பாராளுமனற் , சட்டமன்ற தொகுதிகள் பாஜகவுக்குத் தேவை... அதனால் , அதிமுகவுடனோ , திமுகவுடனோ ஆன கூட்டணி அக்கட்சிக்கு மிகமிக அவசியம் என்பதைவிட அவசரம்... அதனால் தான் , வாஜ்பாயை பதிமூன்று மாதங்கள் படுத்திய 'ஜெ'வுடன் கூட்டணிக்குத் தவிக்கிறார்கள் அத்வானியும் , மோடியும் , சோவும்.....எப்படி இழுப்பது? ஏற்கெனவே விஜயகாந்த்தை தேவையில்லாமல் தூக்கி விட்டுவிட்டோமோ என்ற கடுப்பில் இருக்கும் அம்மா "பாஜகவை தலையில் தூக்கி சுமக்க ஒத்துக்கொள்வாரா? அதுவும் " அம்மா" தான் எல்லாமே எ...