Skip to main content

மாரியாத்தா நோம்பி , பகுதி 1

முந்தாநேத்து , எங்கூருக்கு போன்ல பேசீட்டிருக்கும் போது வாற வைகாசி மாசம் , நோம்பி சாட்டுவாங்க போலிருக்குடான்னு எங்கம்மா சொல்லுச்சிங்களா? உடனே தான் காவகத்துக்கு வந்திச்சி ,

நாம எப்பவோ ஒருக்கா "மாரியாத்தா" நோம்பி பத்தி எழுத ஆரம்பிச்சி பாதீலேயே நிறுத்திப்போட்டது.. அதை இப்ப தொடரலாம்னு முடிவு பண்ணியிருக்கேன்...தா.....................................................மததிற்கு ( ஆமாம் , மொத பதுதிய எழுதுன நாள் அக்டோபர் 2008)  மன்னித்தருள்க. இப்பதிவு முன்பே எழுதிய பதிவின் மீளாக்கமே , தொடர்ச்சியினை வரும் நாட்களில் படித்து மகிழ்க / திட்டுக / வசவுக/ ரசிக்க இன்னபல..இன்னபல. நன்றி 

( மீள்பதிவிற்கான காரணம் , தற்பொழுது வலைப்பூ முகவரி மாற்றப்பட்டுள்ளது.) 


மாரியாத்தா சாமி , அலங்காரத்தோட!- புகைப்படம் நன்றி : இளவஞ்சி!

எங்கூரு மாரியாத்தா கோயிலு ஊருக்குத் தெக்கால எங்கூட்டுக்கு பொறகால  இருக்குதுங்க. நடுவால மாரியாத்தா கோயிலு , கெழவறம் ப்ளேக்கி மாரியாத்தா கோயிலு , மேவறம் மாகாளியாத்தா கோயிலு….மாரியாத்தா கோயுலுக்கும் மாகாளியாத்தா கோயுலுக்கும் நடுவால வீரமாச்சியாத்தா கோயுலு…..

வருசமொருக்கா வைகாசி மாசம் நோம்பி சாட்டுவாங்க. அதென்ன சாட்டுறது ? சித்திரத் திருவிழான்னா மதுரெயில வருசா வருசம் ஆட்டமேட்டிக்கா நடக்குதல்லங்கோ…சாட்டு நோம்பின்னு சொன்னா அப்படி வருசா வருசம் இன்ன தேதி , இன்ன கெழம க்கு நடக்காதுங்க..பெரிவீளா பாத்து இந்த வருசம் சாட்டுலாம்னா சாட்டுவாங்க…இல்லீன்னா இல்லதானுங்க….

என்க்கு அறிவு தெரிஞ்சி 1990 ஓ என்னமோ கோபுர வேல பண்ணி கும்பாபிஷேகம் பண்ணுனாங்க மாரியாத்தா கோயுலுல….அதுக்கப்பறம் நாலு வருசம் நோம்பி சாட்டுனாங்க…அப்பறம் நின்னு போச்சி போங்க……இப்ப கோயிலு மதிலு வேல நடக்குதுங். அது முடிஞ்சி கும்பாபிஷேகம் பண்ணி அதுக்கப்பறந்தேன் நோம்பி , கீம்பி உண்டு போங்க.

எங்கூருல கவண்டமாரு , நாயக்கமாரு , பலவட்டரை சாதி இவியெல்லாம் மாரியாத்தா கோயிலுல சாமி கும்புடுவாங்க்...குரும்பருன்னு ஒரு சாதி உண்டுங். அவிய கன்னடம் பேசுவாங்க். அவியெதான் மெசாரிட்டி எங்கூருல. அவிய மகாலட்சுமி கோயிலுல சாமி கும்புடுவாங்க். ஐப்பசி மாசம் குரும்பரு நோம்பி நடந்தா வைகாசி மாசம் ஊருப்பொது நோம்பி நடக்குமுங்க……….இந்த நோம்பியா அந்த நோம்பியாங்கற சண்டையிலயே நெறயா வருசம் நோம்பியே நடக்காது..கெரமாத்துல இருந்தா இதல்லாம் உங்களுக்கும் பழக்கமாயிருக்குமுங்க.!


முதல்லா பெரீவிய எல்லாம் உக்காந்து நோம்பி கீம்பி சாட்டுறதுன்னு முடிவெடுத்துட்டாங்கண்ணா , எல்லாருக்கும் குசியோ குசிதான். அடுத்த ஒரு மாசத்துக்கு ஊரு எளசுங்க எல்லோரும் ஒரு மார்க்கமாத்தேன் திரிவாங்க.

மொத வேலயே சக்கிலீனை கூப்புட்டு பறையடிக்க மொத்தமா ஒரு ரேட் பேசிடுவாங்க.ரெண்டு வழுவு இருக்குதுங்க. தெகொட்டு வளவுன்னு ஒண்ணு , அண்ணாநகர்னு ஒரு வழுவு.அவியெல்லாம் தெலுங்கு பேசுவாங்க. தப்படிக்கற செவத்தன் , பறையடிக்கிற பாவாடை இப்படி பலபேரு. பேரு காவகத்துல இல்லீன்னாலும் மூஞ்சியெல்லாம் நேத்துப் பாத்தாப்பல இருக்குது போங்க.

ஏழு நாளத்து சாட்டு , பாஞ்சு நாளத்து சாட்டுன்னு ரெண்டிருக்குத்ங். சாட்டி ஏழாநேத்து நோம்பி வச்சா ஏழு நாளத்து சாட்டு…பாஞ்சாம்(15) நாளு நோம்பி வச்சா பாஞ்சாம் நாளத்த சாட்டு…என்னிக்கு நோம்பின்னு முடிவு பண்ணிப் போட்டாங்கண்ணா எண்ணி ஏழு நாளுக்கோ இல்லாட்டி பாஞ்சு நாளுக்கோ முன்னாடி ஊருத் தண்டக்காரனும் , பண்டாரமும் தெருத்தெருவா போயி தப்புக்கொட்டி இன்ன தேதி , இன்ன தேதி , இன்ன நேரம் இன்னின்னாரு முன்னிலைல, இன்னின்னாரு பேசினபடி, இப்பிடியிப்ப்டி நோம்பி சாட்டியிருக்குதுங்கோன்னு சொல்லிப் போட்டு புள்ளையாரு கோயிலுக்குப் போயி தேங்காயொடைச்சி கப்பூரங் காட்டி சாமிக்கும்புட்டுட்டு முடிச்சிக்குவாங்க…



தப்பாக்காட்டக் காரங்கோ - புகைப்படம் நன்றி : மீனாக்ஸ்

அவ்வளவேதானுங்…..நோம்பி சாட்டியாச்சி…..!



ஊரே சுருசுருப்பாயிருமுங்க அதுக்கப்பறம்……பெரீவிய எல்லாஞ் சேந்து ஒவ்வொரு கமிட்டியாப் போடுவாங்க். அதுல மொதல்ல போடற கமிட்டி எது தெரியுமுங்களா? மங்கிலிய வரி வசுலிக்கிற கமிட்டிங்க.ஆறுச்சாமி வாத்தியாரு , மணியகாரரு , படிச்ச எளவயசுப்பசங்க நாலைஞ்சி பேரு இவியல்லாம் சேந்து ஊருல ஒருத்தரு மிச்சமுடாமா மங்கிலிய வரி வசூல் செஞ்சி போடோணும். ஒரு மாங்கலியத்துக்கு ( மாங்கல்யம் – தாலி ) ஒரு வரி , ஒரு வரின்னா அம்பது ரூவாயோ ஒரு பெரீய நோட்டோ அப்பப்ப மாறுமுங்க…கோயிலுக்குன்னு நெறைய பணமிருந்தா வரி கம்மியாப் போடுவாங்க……………..கொஞ்சம் கட்டையாயிருந்தா வரி போட்டுத் தாளிச்சிடுவாங்க……


அப்புறம் விழாக்கமிட்டி , கெரகம் / கம்பம் அமைப்பு கமிட்டி , அம்மனழைப்பு கமிட்டி , மைக் செட்டு கமிட்டி , பந்தலமைப்புக் கமிட்டி……..பூச்சட்டி அழைப்பு கமிட்டி இப்படி கமிட்டி மேல கமிட்டியா இருக்கும். ….இதுல நாஞ்சம்பந்தப்பட்ட கமிட்டியொண்ணு இருக்குதுங்க.
அதென்னன்னு கேக்கறீங்களா?

அதான் மைக் செட்டு , லைட்டு , வரவேற்பு வளைவு கமிட்டி……

எல்லா வருசமும் சூலூரு சக்தி மைக் செட்டுக்காரங்க மொத்தமா எடுத்துக்குவாங்க…அவீளுக்கு போக்குவரத்து , சோறு , மைக்செட்டு ரூமூ இதப்பாத்துகறது தான் நானு , அப்பறம் என் சோட்டுக் காரங்கப் பசங்க இவீளுக்கு வேலை. மூணா நேத்து நோம்பின்னு நெனக்கறேன்…..எல்லோரும் 9 – 10 வது படிக்கிறோம்……சக்தி மைக் செட்டுக்காரங்க ஊட்டுல நோம்பியப்போ ஏதோ விசேசம்..அதுனால அவிய மைக் செட்டுக் கட்டமுடியாதுன்னு சொல்லிப் போட்டாங்க.

நம்ம பசங்கள்ள ஒருத்தனோட ஐப்பச்சி ஊரு பள்ளபாளயம்..
“அடேய் , எங்க மாமனொருத்தரு பள்ளபாளயத்துல மைக் செட்டு வச்சிருக்கறாரு…….நம்மளே அதெய எடுத்துட்டு வந்து ஊரெல்லாம் கட்டி அமர்க்களப்படுத்திரலாம்டா” ன்னு அவஞ் சொன்னான்…………..அதுல கொஞ்சம் காசயும் மிச்சப்பருத்திலாம்னு ஆச வர , ரைட்டுன்னு முடிவு செஞ்சி எங்கப்பாருகிட்ட சொன்னோம்..

“அடத் துப்புக்கெட்டவுனுகளா…..அதல்லாம் பெரிய மனுசங்க செய்யற வேலை. பேச்சி வாக்கெல்லாம் சுத்தமா இ்ருக்கோணும்…நேரங்காலமெல்லாம் சரியா இருக்கோணும்..என்ற பேர கெடுத்துப்போடாதீங்கடா” ன்னார்……….

எங்கம்மாவோ “படிக்குற வேலய உட்டுப்போட்டு உங்குளுக்கெதுக்குடா இந்த வேலயி” ன்னாங்கோ…..

”ஊருப் பல்லுல உழுகாதீங்கடா…” ன்னுச்சி எங்க பாட்டி….!
எதயுக் கேக்கற நெலமியில நாங்கில்லை.

ஊருல ரேடியா ரிப்பேரு பண்ணற கணேசன் எங்கூட்ல தான் வாடகைக்கு கடை போட்டுருந்தாரு……அவருகிட்ட சொல்லி அவுருமூலமா “மைக் செட்டு “ கான் ட்டிராக்ட்டு எடுக்க முயற்சி பண்ணினோம். கான் டிராக்ட்டும் கெடச்சது……………………

அதுக்கப்பறந்தேன் , ஊருப்பல்லுல உழுகாதீங்கடான்னு எங்க பாட்டி சொன்னதுக்கு அர்த்தமும் புரிஞ்சது…சின்ன வயசுலே நோம்பியப்போ தொடர்ச்சியா அஞ்சு நாளைக்கு வெடிய வெடிய கொஞ்சங் கூட சந்தோஷமேயில்லாம முழிச்சிருந்த நரக வேதனை அந்த நோம்பில தான் நடந்துது…

அப்பிடியென்ன நடந்தது… ?

பெரிய பதிவா போயுருச்சிங்களா ….அதுனால அடுத்த பதிவுல சொல்றனுங்….என்ன சரிதானுங்களேன்?

( உள்ளத உள்ளபடியே சொல்லுறது தான் நம்ம நோக்கமுங்க. அதுனால சாதி சொல்லி மனுசங்கள குறிப்பிடுறதுல எனக்கு உடம்பாடே இல்லேன்னாலும் கதயின்ற அளவுல படிக்கோணும்ன்னு கேட்டுக்கறனுங்க சாமியோவ்....!)

Comments

Unknown said…
//// உள்ளத உள்ளபடியே சொல்லுறது தான் நம்ம நோக்கமுங்க. அதுனால சாதி சொல்லி மனுசங்கள குறிப்பிடுறதுல எனக்கு உடம்பாடே இல்லேன்னாலும் கதயின்ற அளவுல படிக்கோணும்ன்னு கேட்டுக்கறனுங்க சாமியோவ்....!//
இதை படிச்சாலும் மனது கேட்கவில்லை நண்பா! இன்னும் கொஞ்சம் நாகரீகமாக எழுதியிருக்கலாம்.
mathibala said…
I'm Sorry Nandha, I'll correct in coming parts.
Unknown said…
தமிழ் இணையதளம், ஆன்மிகம், சித்தர்கள் கதை, மருத்துவ குறிப்புகள், குறுங்கதைகள், சமையல் குறிப்புகள் - பற்றிய மனிதனுக்கு தேவையான
அனைத்தும் ஒரே இணையத்தில்....
www.tamilkadal.com
Unknown said…
அகத்தியர் – காப்பு
பூரணமாய் நிறைந்த சற்குருவின் மலர் பாதத்தை போற்றியும் , யானை முகத்தோனைப் போற்றியும், வைத்திய ரத்தினச் சுருக்கம் 360 என்ற இந்நூலில் செந்துரம், பற்பம், லேகியம், தைலம், கிருதம், எண்ணெய், கலிக்கம், மாத்திரை மற்றும் நாடி பார்க்கும் வித்தை சொல்லியுள்ளேன்
http://www.tamilkadal.com/?p=1151

Popular posts from this blog

பூட்டிய இரும்புக்கூட்டின் கதவு திறக்கப்பட்டது!

சீமான்களின் சபையினிலேயே , கடிதம் எழுதி எழுதிக் களைத்துப்போனதோர் கிழட்டுச் சிங்கம்.....முன்னாலுக்கும் முன்னால் அவர் கொண்ட தமிழ்ப்பற்று.....இன்னாளில் அது தமது மக்கட்பற்றாய் மாறிப்போனதொரு சோகம். ஏதோவொரு புண்ணியத்தில், எவரோ செய்த வரலாற்றுத் தவறால் , கொள்கை , தொலைநோக்கு , மக்கட்பற்று இவை பற்றிய சிந்தையேதுமின்றி அரசியலில் விபத்தாய் விளைந்த கொடநாட்டு ஈழத்தாய்....தேர்தலுக்குத் தேர்தல் மட்டுமே தமிழர் பற்றியும் , தமிழர் அரசியல் பற்றியும் எழுதி வைத்துப் பேசும் செல்வி யவர்.........இன்னமும் அவர் சேலை பிடித்துத்திரியும் வீணர் கூட்டம்.! கூட்டணிக்கேற்றப்படி கொள்கையை மாற்றிக்கொள்ளும் மருத்துவப் படையாச்சி.........வீரமிகு வன்னியகுலத்திலே வந்துதித்த சந்தர்ப்பவாதச் சாக்கடை....சமரசமற்ற கொள்கை அரசியலை சந்தர்ப்பவாதச் சாக்கடைக்குள் தள்ளிய பெருமைக்குரிய மருத்துவர் தமிழ்க்குடிதாங்காத தமிழ்க்குடிதாங்கி! யாரை எதற்காக எதிர்த்து அரசியல் செய்யவேண்டுமே அவர்களோடே தம் தேவைக்குதந்த படி கூட்டு வைத்துக்கொண்டு ஈழத்திற்க்காய் எந்நேரமும் பாடுபடும் திரு.வைகோ அவர்கள்....அவரும் சிறை சென்றார்.

நண்பர் 'டோண்டு' ராகவன்...

உயிரோடு இருக்கும்வரை அறிக்கைகளால் அர்சித்து எதிர்ப்பரசியல் நடாத்தி செத்துபோன பிறகு ஆருயிர் நண்பர் என்று அழைத்துக்கொள்ளும் எல்லா அரசியல்வாதிகளையும் போலவே நான். எனக்கும் மறைந்த உயர்திரு 'டோண்டு' ராகவன் அவர்களுக்குமான பரிச்சயம் அவ்வளவொன்றும் அதிகமில்லைதான். பதிவுலகையும் , பர்ஸனல் லைப்பையும் பிரித்து வைத்துக்கொள்ளும் எண்ணமுடைய நான் , டோண்டு மட்டுமல்ல மற்றபல பதிவுலக நண்பர்களுடனும் கூட தனிப்பட்ட தொடர்புகளை வைத்துக்கொண்டதில்லை... இருந்தாலும் , அவ்வப்போது பதிவுலக பின்னூட்டங்களின்பாலே தொடர்ந்துகொண்டிருந்த தொடர்பு , எனது 'போலி டோண்டு' பற்றிய கட்டுரையொன்றிலேயே  தீவிர விவாதமாக மாறியது.. ஆயிரம் விமர்சனங்கள் அவர் மீதோ இல்லை அவர்தம் பிற்போக்கான கருத்துக்கள் மீதோ இருந்திருக்கலாம். கடினமாக ஓரிரு முறை பேசியிருக்கலாம்.. அத்தனையும் தாண்டி அவர் மிக நல்ல மனிதர் , கடும் உழைப்பாளி என்பதை அவரது பதிவுலகம் மூலமாக அறிந்தவனெனினும் உறுதியாக கூறவியலும்.. அத்தகைய நல்ல மனிதரை இழந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கும் , நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்... வருத்தங்கள

எஸ்.எஸ்.பொன்முடி - மனிதருள் மாணிக்கம்.

எஸ்.எஸ்.பொன்முடி , கொங்குச்சீமையிலே குறிப்பாக பல்லடம் , சூலூர் வட்டாரத்தில் தெரியாதவர்கள் சொற்பமே. எஸ்.எஸ். பொன்முடி அவர்கள் மட்டுமல்ல , அவர்களது குடும்பமே சூலூரில் பழம்பெருமை மிக்க குடும்பம். காலங்காலமாக அவர்களது குடும்பத்தினரே சூலூரின் அனைத்து தேர்தல்களிலும் வென்றதும் , வெல்வதும் வரலாறு. பாரம்பரிய திமுக குடும்பத்தைச் சேர்ந்தவராயினும் மாற்றுக்கட்சியினராலும் மதிக்கப்படும் சில மனிதர்களில் எஸ்.எஸ் பொன்முடியும் ஒருவர். அவருக்கும் , எனக்குமான பரிச்சயமொன்றும் அவ்வளவு அதிகமில்லைதான். அப்போது எனக்கு ஒரு பத்திலிருந்து , பதினைந்து வயதிருந்திருக்கலாம். கலங்கலில் கவுன்சிலர் தங்கவேலு சர்வ அதிகாரமும் பொருந்தியவராய் வலம் வந்துகொண்டிருந்தார். அவர் எஸ்.எஸ்.பொன்முடியின் வலக்கரம். ஊருக்கு மேற்கே ஜல்லிக்குழி என்ற மனிதர்கள் உபயோகப்படுத்த முடியாத , இயலாத பகுதி ஒன்றிருந்தது.....அப்போது கழகம் ஆட்சியிலிருந்தது + பொன்முடி எம்.எல்.ஏவாக இருந்தார். கட்சிக்காரர்கள் , குறிப்பாக ஒடுக்கப்பட்ட , மிக பிற்படுத்தப்பட்ட சமுதாய மக்கள் கேட்டுக்கொண்டதற்காக , மிகுந்த பிரயாசைப்பட்டு தங்கவேல் மற்றும் எஸ்.எஸ்.பொன்முடி அவ