அது தேர்தல் நேரம்.. சட்டசபைத்தேர்தலோ , நாடாளுமன்றத் தேர்தலோ அல்ல. உள்ளூராட்சித் தேர்தல். பொதுவாக , சட்டசபை,நாடாளுமன்றத் தேர்தலைவிட பரபரப்பானது உள்ளூராட்சித் தேர்தல். காரணம் , அச்சமயத்தில் தான் எப்போதுமே தேர்தலில் ஜெயிக்கும் நட்ராஜுக்கவுண்டரும் , தோத்துப்போகும் இன்னபலரும் உள்ளூர் அரசியல் தலைமைகளாக ஜொலிக்கும் சொற்ப காலம். டீக்கடைகள் கட்சிக்கலரற்ற வேட்டிகளுடன் திரியும் தொண்டர்களால் நிரம்பித்திளைக்கும்.... உருளைக்கிழங்கு போண்டாவொன்றையும் , ஒரு லைட் டீ ஒன்றையுமே அடித்துக்கொண்டு , இரவு நேர குவாட்டர் கோட்டாவுக்காக காத்திருக்கும் நட்ராஜுக் கவுண்டரின் தொண்டரடிப் பொடிகள் அடிக்கும் லோலாயும் , தப்புக்கொட்டலும் , மைக்கில் அதிரடியான பொங்கு தமிழ் வசனங்களைப் பொழிவதிலும் ஊருக்குள் திருவிழாவோ என்ற வண்ணம் ஜே.ஜே. என்று தான் காத்திருக்கும்.. எங்கள் "வளவு"ம் கூட அப்படித்தான்.......குடிசைகளாலும் , ஊரோரம் ஓடும் சாக்கடையை வீடாகக்கொண்ட ஈ , கொசு முதலான பறப்பனவைகளையும் , எங்களையும் ஒருங்கே கொண்ட எங்கள் "வளவு" என்று பெருமை கொள்ளலாம். என்ன ஒரே வித்தியாசம்..... கொசுக்களுக்கும் , ஈக்களு...