ரயிலில் காற்று வருவதும் போவதுமாய் இருந்தது…கண்ணாடியை மேலும் , கீழுமாய் தூக்கிவிட்டுக்கொண்டிருந்த என்னை ஒரு தினுசாய்ப் பார்த்தார் அந்தப் பெரிசு…என்ன நினைத்தாரோ எதிர் சீட்டில் போய் உட்கார்ந்து கொண்டார். வாழ்க்கைத் துணை சரியில்லாத போது , இது போன்று அவ்வப்போது கிடைக்கும் வெளியூர் பயணங்களும் , இரயில் பயணங்களுமே நம்மை ஆசுவாசப்படுத்திக்கொள்ள உதவும்.
எந்நேரமும் , அந்தக் காலத்து “வால்வு” ரேடியோ போலக் கதறிக்கொண்டிருக்கும் மனைவி அமைவதெல்லாம் , இறைவன் கொடுத்த சாபம் என்பதை உணர்ந்தவன் நான்…நீங்கள் எப்படி? நினைவுகள் எங்கேயோ இருந்தன……..
மனசைக் கொஞ்சம் இறுக்கப்பிடித்துக் கொள்ளவில்லை யென்றால் அது பாட்டுக்கு எங்கெங்கோ நம்மைக் கொண்டு சென்றுவிடும்..
அப்படித்தான் அந்த இரயில் பயணமும் என் நினைவுகளை மீட்டுக்கொண்டிருந்தது. எல்லாம் கடந்த கிலோ மீட்டரில் சுவரில் தென்பட்ட “காவ்யா” ஜூவல்லரி விளம்பரத்தில் ஆரம்பித்தது.
***
காவ்யா.
அந்த நாளில் என்னைச் சொக்க வைத்த பெயர். பச்சையாக சொல்லப்போனால் , என்னைச் சொக்க வைத்த பிகர். 41 A கொஞ்சம் ஆபிஸுக்கு லேட்டாகப் போனாலும் , லேட்டஸ்டா போவதாக நண்பர்களிடம் சொல்லிக்கொண்டு போனதற்கான ஒரே காரணம் “காவ்யா”.
அந்த பேருந்தின் பெருமை அறிய வேண்டுமானால் சூலூரில் இருந்து காந்திபுரத்திற்கு காலை நேரத்தில் பயணம் செய்திருக்க வேண்டும். திருச்சி ரோடு மக்கள் எல்லோரும் கல்லூரிகள் நிறைந்த அவினாசி ரோட்டிற்குப் போக அனேகமாக எளிய வழி அந்தப் பேருந்துதான். ஆனால் கொஞ்சம் சுத்து. அனேகர் சிங்காநல்லூர் வழியாகத்தான் போவார்கள்….நிறைய கம்பெனிகளும் இருப்பதால் வேலையாட்களுக்கும் பஞ்சமில்லை அந்தப் பேருந்தில்.
பேருந்து தொடங்கும் இடத்திலிருந்தே படியில் தொங்கும் அவல நிலை எனக்குத்தெரிந்து அந்தப் பேருந்துக்கே உண்டு.
அந்த தொங்கி வழியும் பேருந்தில் ஓடிப்போய் பின்கதவில் ஏறி , அனேகம் பேரின் காலை மிதித்துக்கொண்டும் , வழியில் வைத்திருக்கும் பையின் மீதேறி சாகசம் புரிந்து கொண்டும் அவர்களின் வசவுகளை வாங்கிக்கொண்டும் நான் சென்று சேரும் இடம் அந்தப் பேருந்தின் மூன்றாவது முன்னிருக்கை….
அனுதினமும் பயணம் செல்வதால் அனேகர் பழக்கமானவர்கள் , கண்டக்டரிடம் கொடுக்கல் , வாங்கல் நடக்குமளவிற்கு பழக்கமான பேருந்து அது. வெகுபலரும் அந்த மூன்றாம் சீட்டுக்கு அருகில் இருக்கும் கம்பியைப் பிடித்துக்கொண்டு நிற்கும் என்னை ஒரு தினுசாகப் பார்ப்பதுண்டு..அப்போதெல்லாம் அதன் அர்த்தம் புரிபடவே இல்லை.
மு.க.புதூர் நிறுத்தம் , “காவ்யா” அங்கேதான் ஏறுவாள் தன் மாமாவுடன். எங்கிருந்துதான் அவளுக்கு மட்டும் அப்படி ஒரு அசத்தும் கலரில் சுடிதார் கிடைக்குமோ என்று தெரியவில்லை…. சற்றே பூசினாற்போன்ற ஒரு உடல்…..நீண்ட நாட்களாகவே மாற்றாமல் இருக்கும் பிரவுன் நிற கைப்பை..இது அவளுக்கான அடையாளம்....
ஏறியதும் அடுத்த நிறுத்தம் வரை படியை ஒட்டியே நின்று கொள்வாள்…சூலூர் பிரிவில் , அவளது மாமா இறங்கிக்கொள்வார்…..பிறகுதான் நான் நிற்கும் இடத்திற்கு இடம்பெயர்வாள்..வெகுகாலத்திற்கு நான் தான் அவளுக்காக அந்த மூன்றாம் சீட்டில் போய் நிற்கிறேன் என்றே நினைத்துக்கொண்டிருந்தேன்…
நாட்கள், மாதங்களாக பார்த்துக்கொண்டோம் , பார்த்துக்கொண்டே இருந்தோம்..பார்த்துக்கொண்டு மட்டுமே இருந்தோம்…பொது இடத்தில் ஒருவர் கண்களை இன்னொருவர் நேரே பார்க்கும் அனுபவம் கொஞ்சம் திகிலானதுதான்…ஆனாலும் , என்னுள்ளும் , அவளுள்ளும் இருந்த பயமோ , உள்ளுணர்வோ தெரியாது , பேசிக்கொள்ள மாட்டோம்… அதற்கான முக்கியக் காரணங்களில் ஒன்று , கிராமத்து வழியில் அப்பேருந்து செல்வதால் தெரிந்தவர்கள் நிறைய உண்டு என்பதும் கூட.
அவ்வப்போது சிரித்துக்கொள்வதோடு சரி….ஏதேனும் ஒரு சில நேரங்களில் எனக்கு அமர இடம் கிடைக்கும் போது அவளது கைப்பையை வாங்கி வைத்துக்கொள்வேன். பேருந்து நிறுத்தத்தில் எப்போதாவது பார்க்கும் போது “எப்படி இருக்கீங்க” என்று சொல்வதோடு முற்றும் எங்கள் பரிச்சயம்.
இருந்தாலும் , அவள் என் நினைவில் வெகுபகுதியை குடிகொண்டிருந்தாள்….என் நண்பர்களுடனான சம்பாஷணையிலும் அவளே குடி கொண்டிருந்தாள்.
***
மாதங்கள் முடிந்து இப்படிப் பார்வையிலேயே வருடமும் கடந்திருந்தது…எனக்கு அலுவலக நேரம் சற்றே முன் போடப்பட்டமையால் 41-A என்னும் வரலாற்றுப் பேருந்திற்கான அட்டென்ஷன் போட முடியாமல் போனது.. ஒரு மாதம் வரை காத்திருந்த நான் , ஒரு காலை வேளையில் “ஆபிஸுக்கு” பர்மிஷன் போட்டுக்கொண்டு அந்தப் பேருந்தில் ஏறினேன். …காரணம் “ காவ்யா” என்பது உங்களுக்கும் இப்போது தெரிந்திருக்கும். அப்போது எனக்கு மட்டுமே தெரியும்..
“காவ்யா” வருவாளா , மாட்டாளா என்பது பற்றிய நினைவே மேலோங்கி இருந்ததால் , வழியில் காய்கறி மூட்டையை மிதித்துவிட்டு வந்ததற்காக “ நாசமாக “ நான் போகச் சபித்த கிழவியின் கத்தல் இப்போது நியாபகத்துக்கு வந்தாலும் அப்போது என்னைச் சலனப்படுத்தவில்லை….என் மூன்றாம் சீட்டுக்கம்பிக்கு ஒருத்தன் போட்டிக்கு வந்திருந்தான்…ஆள் பார்க்க கொஞ்சம் “ஸ்மார்ட்டாக” வேறு இருந்ததால் எங்கே என் “காவ்யா”வுக்குப் போட்டியாக வந்திருப்பானோ என்றெல்லாம் கிறுக்குத்தனமாக ( நெசந்தான்..) நினைத்துக்கொண்டேன்.
கஷ்டப்பட்டு அந்த மூணாம் சீட்டுக் கம்பியை வெற்றிகரமாக மீட்டெடுத்தவுடன் “காவ்யா”வையே அடைந்து விட்டதாக சந்தோஷப் பட்டுக்கொண்டேன்….வந்தாள் , அன்று ஏனோ அவளது “மாமா” வரவில்லை. என்னைப் பார்த்ததும் முகம் மலர்ந்தது..வெடுவெடுவென அருகில் வந்தாள்…சிரித்தாள்…அதிசயமாக பேசினாள் தயக்கமேதுமில்லாமல்..
“என்ன ஒரு மாசமா காணோம் உங்கள பஸ்ஸுல?”
பேசினாள் என்பதைவிட , குற்றால அருவியில் குளித்தால் என்ன புத்துணர்வு இருக்குமோ அப்படியொரு புத்துணர்வை என் நெஞ்சில் ஏற்றினாள்..
“ ஆமாங்க , ஆபிஸ் டைம் மாத்திட்டாங்க…அதான்..”
பேசினோம்…இன்னும் என்ன என்னமோ பேசினோம்…….அலுவலகத் தொலைபேசி எண்ணைப் பரிமாறிக்கொண்டோம்…..
அவளது நிறுத்தம் வந்தது….பஸ் ப்ரேக் போட்டு நின்றது..
“சரி…கூப்பிடுங்க” என்று விடை பெற்றாள்…..
ரயில் நின்றது….கூலிகள் பெட்டிகளை இறக்க போட்டி போட்டுக்கொண்டு வந்து என் நினைவையும் கலைத்தார்கள்….
***
இரண்டே நாள் பயணமாதலால் , எனது சிறு பெட்டியைத் தூக்கிக்கொண்டு வெளியே வந்து “கோயமுத்தூரின்” அசிங்கங்களில் முதலானதும் , கோயமுத்தூரின் பெருமைக்கு இழுக்கானதுமான “ஆட்டோ” ஒன்றைப் பிடித்து வீடு வந்து சேர்ந்தேன்….
கதவு தாளிடப் படவில்லை.
மனைவி சமையலறையில் இருந்தாள் போலும்…
வெளியே வந்தாள்…
“என்ன திடுதிப்புன்னு வந்து நிக்கறீங்க? ஒரு போன் பண்ணக்கூடாதா? கொஞ்சம் சாப்பாடு சேத்து வச்சிருப்பேன்….இப்பதான் கழுவிக்கொட்டினேன்…மறுபடியும் சோறாக்கணும்…எல்லாம் என் தலைவிதி…..உங்கள எல்லாம் எப்படிதான் ஆபிஸூல வெச்சி சம்பளம் கொடுக்கறாங்களோ? எனக்குன்னு வந்து வாய்ச்சிருக்கீங்க பாருங்க”
இராட்சசிக்குப் போன் பண்ண மறந்து போனது நினைவிற்கு வந்து என்னைச் சபித்துக்கொண்டேன்….பசி வயிற்றைக்கிள்ளினாலும்
“நான் ரயில்ல சாப்பிட்டுட்டேன்…அதான் , போன் பண்ணல” என்று சொல்லிக்கொண்டே முகம் கழுவி படுக்கையில் சாய்ந்தேன் அசதியாக…..
“என்ன அதுக்குள்ள , படுக்கப் போய்ட்டீங்க? நான் என்ன சும்மாவா இருக்கேன்? இந்தா , இவனைக் கொண்டு போய் கொஞ்சம் தொட்டில்ல போட்டு , ஆட்டி வுடுங்க , அழுதுட்டே இருக்கானுல்ல…..எப்பிடி இப்படி பொறுப்பே இல்லாத மனுசனா இருக்கீங்க?” என்று இறைந்தாள் “காவ்யா”.
படுக்கையில் நேரெதிரே , நானும் – காவ்யாவும் காதலித்த கணங்களில் எடுத்துக்கொண்ட புகைப்படத்தில் சிரித்தது…அருகிலேயே , நானும் அவளும் மணக்கோலத்தில்…அருகில் 41 – A மாமாவும்…சிரித்தபடியே..!!
“ 41-A “ மீதும் , அன்றைக்குப் பார்த்து பர்மிஷன் கொடுத்த என் அலுவலக மேலாளர் மீதும் , அன்றைக்கு வராமல் போன அவளது மாமா மீதும் எனக்கு ஏனோ கோபம் கோபமாய் வந்தது...
***
பின்குறிப்பு : இது என் கதை அல்ல.
Comments
http://www.tamilkadal.com/?p=746
அந்த ஆண்டு ஆந்திராவில் மழையே பெய்யவில்லை. அதனால் ஏரி, குளம், குட்டை அனைத்தும் வறண்டு கிடந்தன. அதனால் விவசாயம் நடைபெறவில்லை. அதனால் தண்ணீர்ப் பஞ்சமும் உணவுப் பஞ்சமும் தலை விரித்தாடியது.
அப்போது அக்கிராமத்துக்கு ஒரு சாமியார் வந்து சேர்ந்தார். அவர் வந்து சேர்ந்த அன்றே பலமான மழைபெய்து ஆறு, ஏரி, குளம், எல்லாம் நிரம்பிவிட்டன.சாமியார் வந்ததன் காரணமாகத்தான் நல்ல மழை பெய்துள்ளது. என்று எண்ணிய அவ்வூர் மக்கள் சாமியாரை வாயாரப் புகழ்ந்து அவரை வணங்கி ஆசி பெற்றனர்.
http://www.tamilkadal.com/?p=746