அது தேர்தல் நேரம்..
சட்டசபைத்தேர்தலோ , நாடாளுமன்றத் தேர்தலோ அல்ல. உள்ளூராட்சித் தேர்தல். பொதுவாக , சட்டசபை,நாடாளுமன்றத் தேர்தலைவிட பரபரப்பானது உள்ளூராட்சித் தேர்தல்.
காரணம் , அச்சமயத்தில் தான் எப்போதுமே தேர்தலில் ஜெயிக்கும் நட்ராஜுக்கவுண்டரும் , தோத்துப்போகும் இன்னபலரும் உள்ளூர் அரசியல் தலைமைகளாக ஜொலிக்கும் சொற்ப காலம்.
டீக்கடைகள் கட்சிக்கலரற்ற வேட்டிகளுடன் திரியும் தொண்டர்களால் நிரம்பித்திளைக்கும்.... உருளைக்கிழங்கு போண்டாவொன்றையும் , ஒரு லைட் டீ ஒன்றையுமே அடித்துக்கொண்டு , இரவு நேர குவாட்டர் கோட்டாவுக்காக காத்திருக்கும் நட்ராஜுக் கவுண்டரின் தொண்டரடிப் பொடிகள் அடிக்கும் லோலாயும் , தப்புக்கொட்டலும் , மைக்கில் அதிரடியான பொங்கு தமிழ் வசனங்களைப் பொழிவதிலும் ஊருக்குள் திருவிழாவோ என்ற வண்ணம் ஜே.ஜே. என்று தான் காத்திருக்கும்..
எங்கள் "வளவு"ம் கூட அப்படித்தான்.......குடிசைகளாலும் , ஊரோரம் ஓடும் சாக்கடையை வீடாகக்கொண்ட ஈ , கொசு முதலான பறப்பனவைகளையும் , எங்களையும் ஒருங்கே கொண்ட எங்கள் "வளவு" என்று பெருமை கொள்ளலாம்.
என்ன ஒரே வித்தியாசம்.....
கொசுக்களுக்கும் , ஈக்களுக்கும் இங்கிங்கு போகலாம் , இங்கிங்கு போகக் கூடாது என்ற வரைமுறை இல்லை...ஆனால் , எங்களுக்கு உண்டு.
எங்களுக்கென தனியான "பீ"க்காடு ,
எங்களுக்கென தனியான "சேந்தி" கிணறு ,
எங்களுக்கென தனியான "இடு மற்றும் சுடு" காடு,
எங்களுக்கென்றே தனியான அண்ணமார் கோயிலும் , மதுரை வீரன் கோயிலுமாக செல்வாக்காகவே வாழ்ந்தோம் , வாழ்கிறோம் நாங்கள்.
சாமியிலேயே சாதி பார்க்கும் , தனித்தமிழ் சமுகத்தில் பிறந்த எங்களுக்கென்ன குறை?
அப்படியாகப் பட்ட எங்களிடம் கூட "குறை" இருப்பதாகக் கண்டுபிடித்து நட்ராஜுக்கவுண்டரின் அடிப்பொடிகள் அதை நிவர்த்தி செய்வதாக அளந்து விட்டுக்கொண்டிருந்தார்கள்..
வளவில் இருக்கும் மண்சாலைகளை ( அதைச் சாலை என்று கூறுவதை விட 'சந்து' என்று கூறுவதே சரியான அணுகுமுறையாயிருக்கும்.) கான்கிரிட் சாலையாக மாற்றிப் போட்டுத்தருவார் "தலைவர்" என்றார்கள்..
"பீ"க்காடு போகும் வழி , சேறும் சகதியுமாக இருப்பதாகவும் , தலைவர் ஜெயித்தால் அதை தம் செலவிலேயே "செங்குட்டை" மண்ணெடுத்து சீர்படுத்தித்தருவார் என்றார்கள்.
சேந்தி கிணற்றில் கோடைகாலத்தில் தண்ணீர் இல்லாமல் போகும்படியால் , "வளவி"லேயே கைப்பம்பு போட்டுத்தர ஆவன செயவதாகவும் சொன்னார்கள்.
இன்னபல , இன்னபல வாக்குறுதிகள்...பெருசுகளைக் கையில் போட்டுக்கொண்ட எங்க "வளவின் " அரசியல் ஆலோசகர் " ராமனொ" நட்ராசுக்கவுண்டரின் அருமைபெருமைகளை அள்ளி விட்டுக்கொண்டிருந்தார்.
இடையில் புகுந்த ஒரு இளந்தாரி " போன தரம் எலெக்சன்லே செயிச்சவுடனே கவுண்டரு " பம்புசெட்டு போட்டுத்தாரேன்னார் , ஆனா போடலையே " என்று சவுண்டு விட்டார்...
"அட , பெரிய மனசங்களை அப்படிப்பேசக் கூடாது" என்றபடியே அந்த இளைஞனின் குரலை அடக்கிய ஒரு பெருசு "இராமனின் " கடைக்கண் பார்வைக்காக திரும்பினார்....
குவாட்டர் வினியோகம் ஆரம்பித்தது...எல்லோரும் "நட்ராசுக்கவுண்டரின் தயாள குணத்தைப் பாராட்டிக்கொண்டே கலைந்து போயினர். அந்தப் பெருசுக்கு மட்டும் இன்னொரு குவாட்டர் அதிகமாகக் கிடைத்தது....நாளைக்கும் சேர்த்து "போணி" பண்ணிய சந்தோசத்தில் உச்சிமகிழ்ந்து போனது "பெருசு".
எப்போதும் போல ஜெயித்தார் நட்ராஜிக்கவுண்டர்...
எப்போதும் போலவே "சேந்தி" கிணற்றில் தண்ணீர் வற்றிப் போனது.
எப்போதும் போலவே "பீ"க்காட்டுச் சாலை சாக்கடை நீரில் சகதியாகவே இருந்தது.
எங்கள் வளவின் பெருசுகளும் , எளசுகளும் , கூலிக்குப் போய் விட்டு வந்து சொந்தக்காசில் குடித்தார்கள். அதிலும் பலர் அடுத்த எலக்சன் எப்போ வரும் என்று காத்திருக்கவும் செய்தார்கள்.
எப்போதும் போல எங்கள் மதுரைவீரன் சாமியும் , அண்ணமார் சாமியும் தங்களின் மந்தகாசச் சிரிப்புடன் மக்களுக்கு அருள்பாலித்துக் கொண்டிருந்தார்கள். ஒரு சுமார் 200 - 300 வருடங்களாக அவர்கள் அருள்பாலித்துக்கொண்டே தான் இருக்கிறார்கள். எங்கள் "வளவு"ம் கூட சகல செல்வாக்குகளுடன் முன்னேறிக்கொண்டே தான் இருக்கிறது......
இப்படிக்கு
ஒரு வளவுத் தமிழன்.
பின்குறிப்பு :-
- வளவு - என்பது கிராமங்களில் ஆதிதிராவிடர்களும் , தலித்களும் ஊருக்கு ஒதுக்குப்புறமாக தனியே வாழ்கின்ற ஒர் இடம்.
Comments
எப்படி இருக்கீங்க?
இன்னமும் பாண்டுங்கில்தான் வாசமா?
உங்களுடைய தொடர்பு விவரங்கள் இல்லை.
நன்றி , ஆம் பாண்டூங் தான்.
என் வாழ்வின் மகிழ்ச்சியான கணமொன்றில் என் கூட இருந்த உங்களை மறக்கவே இயலவில்லை.
தொடர்பு விவரங்கள் மின்னஞ்சலில் தருகிறேன். நன்றி.
நன்றி தோழர்.