Skip to main content

வளவு.

 அது தேர்தல் நேரம்..

சட்டசபைத்தேர்தலோ , நாடாளுமன்றத் தேர்தலோ அல்ல. உள்ளூராட்சித் தேர்தல். பொதுவாக , சட்டசபை,நாடாளுமன்றத் தேர்தலைவிட பரபரப்பானது உள்ளூராட்சித் தேர்தல். 

காரணம் , அச்சமயத்தில் தான் எப்போதுமே தேர்தலில் ஜெயிக்கும் நட்ராஜுக்கவுண்டரும் , தோத்துப்போகும் இன்னபலரும் உள்ளூர் அரசியல் தலைமைகளாக ஜொலிக்கும் சொற்ப காலம். 

டீக்கடைகள் கட்சிக்கலரற்ற வேட்டிகளுடன் திரியும் தொண்டர்களால் நிரம்பித்திளைக்கும்.... உருளைக்கிழங்கு போண்டாவொன்றையும் , ஒரு லைட் டீ ஒன்றையுமே அடித்துக்கொண்டு , இரவு நேர குவாட்டர் கோட்டாவுக்காக காத்திருக்கும் நட்ராஜுக் கவுண்டரின் தொண்டரடிப் பொடிகள் அடிக்கும் லோலாயும் , தப்புக்கொட்டலும் , மைக்கில் அதிரடியான பொங்கு தமிழ் வசனங்களைப் பொழிவதிலும் ஊருக்குள் திருவிழாவோ என்ற வண்ணம் ஜே.ஜே. என்று தான் காத்திருக்கும்..


எங்கள் "வளவு"ம் கூட அப்படித்தான்.......குடிசைகளாலும் , ஊரோரம் ஓடும் சாக்கடையை வீடாகக்கொண்ட ஈ , கொசு முதலான பறப்பனவைகளையும் , எங்களையும் ஒருங்கே கொண்ட எங்கள் "வளவு" என்று பெருமை கொள்ளலாம்.

என்ன ஒரே வித்தியாசம்.....

கொசுக்களுக்கும் , ஈக்களுக்கும் இங்கிங்கு போகலாம் , இங்கிங்கு போகக் கூடாது என்ற வரைமுறை  இல்லை...ஆனால் , எங்களுக்கு உண்டு. 

எங்களுக்கென தனியான "பீ"க்காடு , 

எங்களுக்கென தனியான "சேந்தி" கிணறு , 

எங்களுக்கென தனியான "இடு மற்றும் சுடு" காடு, 

எங்களுக்கென்றே தனியான அண்ணமார் கோயிலும் , மதுரை வீரன் கோயிலுமாக செல்வாக்காகவே வாழ்ந்தோம் , வாழ்கிறோம் நாங்கள். 

சாமியிலேயே சாதி பார்க்கும் , தனித்தமிழ் சமுகத்தில் பிறந்த எங்களுக்கென்ன குறை? 

அப்படியாகப் பட்ட எங்களிடம் கூட "குறை" இருப்பதாகக் கண்டுபிடித்து நட்ராஜுக்கவுண்டரின் அடிப்பொடிகள் அதை  நிவர்த்தி செய்வதாக அளந்து விட்டுக்கொண்டிருந்தார்கள்..

வளவில் இருக்கும் மண்சாலைகளை ( அதைச் சாலை என்று கூறுவதை விட 'சந்து' என்று கூறுவதே சரியான அணுகுமுறையாயிருக்கும்.) கான்கிரிட் சாலையாக மாற்றிப் போட்டுத்தருவார் "தலைவர்" என்றார்கள்..

"பீ"க்காடு போகும் வழி , சேறும் சகதியுமாக இருப்பதாகவும் , தலைவர் ஜெயித்தால் அதை தம் செலவிலேயே "செங்குட்டை" மண்ணெடுத்து சீர்படுத்தித்தருவார் என்றார்கள்.

சேந்தி கிணற்றில் கோடைகாலத்தில் தண்ணீர் இல்லாமல் போகும்படியால் , "வளவி"லேயே கைப்பம்பு போட்டுத்தர ஆவன செயவதாகவும் சொன்னார்கள்.

இன்னபல , இன்னபல வாக்குறுதிகள்...பெருசுகளைக் கையில் போட்டுக்கொண்ட எங்க "வளவின் " அரசியல் ஆலோசகர் " ராமனொ" நட்ராசுக்கவுண்டரின் அருமைபெருமைகளை அள்ளி விட்டுக்கொண்டிருந்தார்.

இடையில் புகுந்த ஒரு இளந்தாரி " போன தரம் எலெக்சன்லே செயிச்சவுடனே கவுண்டரு " பம்புசெட்டு போட்டுத்தாரேன்னார் , ஆனா போடலையே " என்று சவுண்டு விட்டார்...

"அட , பெரிய மனசங்களை அப்படிப்பேசக் கூடாது" என்றபடியே அந்த இளைஞனின் குரலை அடக்கிய ஒரு பெருசு "இராமனின் " கடைக்கண் பார்வைக்காக திரும்பினார்....

குவாட்டர் வினியோகம் ஆரம்பித்தது...எல்லோரும் "நட்ராசுக்கவுண்டரின் தயாள குணத்தைப் பாராட்டிக்கொண்டே கலைந்து போயினர். அந்தப் பெருசுக்கு மட்டும் இன்னொரு குவாட்டர் அதிகமாகக் கிடைத்தது....நாளைக்கும் சேர்த்து "போணி" பண்ணிய சந்தோசத்தில் உச்சிமகிழ்ந்து போனது "பெருசு".

எப்போதும் போல ஜெயித்தார் நட்ராஜிக்கவுண்டர்...

எப்போதும் போலவே "சேந்தி" கிணற்றில் தண்ணீர் வற்றிப் போனது.
எப்போதும் போலவே "பீ"க்காட்டுச் சாலை சாக்கடை நீரில் சகதியாகவே இருந்தது.

எங்கள் வளவின் பெருசுகளும் , எளசுகளும் , கூலிக்குப் போய் விட்டு வந்து சொந்தக்காசில் குடித்தார்கள். அதிலும் பலர் அடுத்த எலக்சன் எப்போ வரும் என்று காத்திருக்கவும் செய்தார்கள். 

எப்போதும் போல எங்கள் மதுரைவீரன் சாமியும் , அண்ணமார் சாமியும் தங்களின் மந்தகாசச் சிரிப்புடன் மக்களுக்கு அருள்பாலித்துக் கொண்டிருந்தார்கள். ஒரு சுமார் 200 - 300 வருடங்களாக அவர்கள் அருள்பாலித்துக்கொண்டே தான் இருக்கிறார்கள். எங்கள் "வளவு"ம் கூட சகல செல்வாக்குகளுடன் முன்னேறிக்கொண்டே தான் இருக்கிறது......


இப்படிக்கு 

ஒரு வளவுத் தமிழன்.

பின்குறிப்பு :-
- வளவு - என்பது கிராமங்களில் ஆதிதிராவிடர்களும் , தலித்களும் ஊருக்கு ஒதுக்குப்புறமாக தனியே வாழ்கின்ற ஒர் இடம்.

Comments

யாசவி said…
நல்ல ஆழமான பார்வை....

எப்படி இருக்கீங்க?

இன்னமும் பாண்டுங்கில்தான் வாசமா?

உங்களுடைய தொடர்பு விவரங்கள் இல்லை.
ஒரு வழவுத்தோழன் said…
இதுவரை பல வழவு ஒட்டிய பதிவுகள் இருப்பினும் , அரசியலையும் கலந்து இன்றைய நிலையைச் சொன்னது அற்புதம்.
அன்பு நண்பர் யாசவி.

நன்றி , ஆம் பாண்டூங் தான்.

என் வாழ்வின் மகிழ்ச்சியான கணமொன்றில் என் கூட இருந்த உங்களை மறக்கவே இயலவில்லை.

தொடர்பு விவரங்கள் மின்னஞ்சலில் தருகிறேன். நன்றி.
இதுவரை பல வழவு ஒட்டிய பதிவுகள் இருப்பினும் , அரசியலையும் கலந்து இன்றைய நிலையைச் சொன்னது அற்புதம்/

நன்றி தோழர்.

Popular posts from this blog

பூட்டிய இரும்புக்கூட்டின் கதவு திறக்கப்பட்டது!

சீமான்களின் சபையினிலேயே , கடிதம் எழுதி எழுதிக் களைத்துப்போனதோர் கிழட்டுச் சிங்கம்.....முன்னாலுக்கும் முன்னால் அவர் கொண்ட தமிழ்ப்பற்று.....இன்னாளில் அது தமது மக்கட்பற்றாய் மாறிப்போனதொரு சோகம். ஏதோவொரு புண்ணியத்தில், எவரோ செய்த வரலாற்றுத் தவறால் , கொள்கை , தொலைநோக்கு , மக்கட்பற்று இவை பற்றிய சிந்தையேதுமின்றி அரசியலில் விபத்தாய் விளைந்த கொடநாட்டு ஈழத்தாய்....தேர்தலுக்குத் தேர்தல் மட்டுமே தமிழர் பற்றியும் , தமிழர் அரசியல் பற்றியும் எழுதி வைத்துப் பேசும் செல்வி யவர்.........இன்னமும் அவர் சேலை பிடித்துத்திரியும் வீணர் கூட்டம்.! கூட்டணிக்கேற்றப்படி கொள்கையை மாற்றிக்கொள்ளும் மருத்துவப் படையாச்சி.........வீரமிகு வன்னியகுலத்திலே வந்துதித்த சந்தர்ப்பவாதச் சாக்கடை....சமரசமற்ற கொள்கை அரசியலை சந்தர்ப்பவாதச் சாக்கடைக்குள் தள்ளிய பெருமைக்குரிய மருத்துவர் தமிழ்க்குடிதாங்காத தமிழ்க்குடிதாங்கி! யாரை எதற்காக எதிர்த்து அரசியல் செய்யவேண்டுமே அவர்களோடே தம் தேவைக்குதந்த படி கூட்டு வைத்துக்கொண்டு ஈழத்திற்க்காய் எந்நேரமும் பாடுபடும் திரு.வைகோ அவர்கள்....அவரும் சிறை சென்றார்.

நண்பர் 'டோண்டு' ராகவன்...

உயிரோடு இருக்கும்வரை அறிக்கைகளால் அர்சித்து எதிர்ப்பரசியல் நடாத்தி செத்துபோன பிறகு ஆருயிர் நண்பர் என்று அழைத்துக்கொள்ளும் எல்லா அரசியல்வாதிகளையும் போலவே நான். எனக்கும் மறைந்த உயர்திரு 'டோண்டு' ராகவன் அவர்களுக்குமான பரிச்சயம் அவ்வளவொன்றும் அதிகமில்லைதான். பதிவுலகையும் , பர்ஸனல் லைப்பையும் பிரித்து வைத்துக்கொள்ளும் எண்ணமுடைய நான் , டோண்டு மட்டுமல்ல மற்றபல பதிவுலக நண்பர்களுடனும் கூட தனிப்பட்ட தொடர்புகளை வைத்துக்கொண்டதில்லை... இருந்தாலும் , அவ்வப்போது பதிவுலக பின்னூட்டங்களின்பாலே தொடர்ந்துகொண்டிருந்த தொடர்பு , எனது 'போலி டோண்டு' பற்றிய கட்டுரையொன்றிலேயே  தீவிர விவாதமாக மாறியது.. ஆயிரம் விமர்சனங்கள் அவர் மீதோ இல்லை அவர்தம் பிற்போக்கான கருத்துக்கள் மீதோ இருந்திருக்கலாம். கடினமாக ஓரிரு முறை பேசியிருக்கலாம்.. அத்தனையும் தாண்டி அவர் மிக நல்ல மனிதர் , கடும் உழைப்பாளி என்பதை அவரது பதிவுலகம் மூலமாக அறிந்தவனெனினும் உறுதியாக கூறவியலும்.. அத்தகைய நல்ல மனிதரை இழந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கும் , நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்... வருத்தங்கள

எஸ்.எஸ்.பொன்முடி - மனிதருள் மாணிக்கம்.

எஸ்.எஸ்.பொன்முடி , கொங்குச்சீமையிலே குறிப்பாக பல்லடம் , சூலூர் வட்டாரத்தில் தெரியாதவர்கள் சொற்பமே. எஸ்.எஸ். பொன்முடி அவர்கள் மட்டுமல்ல , அவர்களது குடும்பமே சூலூரில் பழம்பெருமை மிக்க குடும்பம். காலங்காலமாக அவர்களது குடும்பத்தினரே சூலூரின் அனைத்து தேர்தல்களிலும் வென்றதும் , வெல்வதும் வரலாறு. பாரம்பரிய திமுக குடும்பத்தைச் சேர்ந்தவராயினும் மாற்றுக்கட்சியினராலும் மதிக்கப்படும் சில மனிதர்களில் எஸ்.எஸ் பொன்முடியும் ஒருவர். அவருக்கும் , எனக்குமான பரிச்சயமொன்றும் அவ்வளவு அதிகமில்லைதான். அப்போது எனக்கு ஒரு பத்திலிருந்து , பதினைந்து வயதிருந்திருக்கலாம். கலங்கலில் கவுன்சிலர் தங்கவேலு சர்வ அதிகாரமும் பொருந்தியவராய் வலம் வந்துகொண்டிருந்தார். அவர் எஸ்.எஸ்.பொன்முடியின் வலக்கரம். ஊருக்கு மேற்கே ஜல்லிக்குழி என்ற மனிதர்கள் உபயோகப்படுத்த முடியாத , இயலாத பகுதி ஒன்றிருந்தது.....அப்போது கழகம் ஆட்சியிலிருந்தது + பொன்முடி எம்.எல்.ஏவாக இருந்தார். கட்சிக்காரர்கள் , குறிப்பாக ஒடுக்கப்பட்ட , மிக பிற்படுத்தப்பட்ட சமுதாய மக்கள் கேட்டுக்கொண்டதற்காக , மிகுந்த பிரயாசைப்பட்டு தங்கவேல் மற்றும் எஸ்.எஸ்.பொன்முடி அவ