இந்தப்பதிவினை 2009 ல் எழுதினேன். படித்த நண்பர்கள் அனைவரும் , இது எமக்கு புதிய செய்தியே என்றார்கள்....நல்லசெய்தியினை நாலு பேருக்கு தெரியும்படி மீண்டும் உரக்கச்சொல்வதில் தவறில்லையே. அதனால் இந்த மீள்பதிவு..... நவம்பர் 2009 க்கும் 2012க்கும் இடைப்பட்ட காலவெளியில் 'தமிழம்' இணையம் தான் எத்துணை வளர்ந்திருக்கிறது? வாழ்த்துக்களும் ! , வணக்கங்களும்!
தற்செயலாக
நேற்றிரவு வலையில் உலாவிக்கொண்டிருந்தேன்….மேற்கண்ட தலைப்பிலிருக்கும்
குறள்மொழிக்கேற்ப , அரியதொன்றை செய்து கொண்டிருக்கும் திரு. பொள்ளாச்சி
நசன் அவர்களைப் பற்றியும் , அவரது தமிழம் இணையம் பற்றியும் அரிய நேரிட்டது.
உங்களில் சிற்றிதழ் தொடர்புபட்ட பலரும் அவரை அறிந்திருக்கக்
கூடும்…….இன்னும் பலர் அவரைப் பற்றி அறிந்திருக்காமலும் இருக்கக்
கூடும்…..என்னைப் போல..!
அதனால் ஒரு சின்ன அறிமுகம்… ( சூரியனுக்கே டார்ச்சா என்று திரு.நசன் அவர்கள் கோவித்துக்கொள்ளக் கூடாது…!!)
பொள்ளாச்சி நசன் என்று தன் பெயரை வழங்கும் மணிப்பிள்ளை நடேசன் தமிழம் என்னும் வலையிதழின் ஆசிரியர். இவர் சிதம்பரத்தில், செப்டம்பர் 15, 1952 அன்று பிறந்தார். பொள்ளாச்சி நசன் தமிழ்ச் சிற்றிதழ்களின் சேகரிப்பாளராக பலராலும் அறியப்படுபவர். 1980 களிலிருந்து இவர் சிற்றிதழ்களைச் சேகரித்து வருகின்றார். அத்துடன் சிற்றிதழ்ச் செய்தி என்னும் இதழையும் வெளியிட்டார். சிற்றிதழ்ச் செய்தி இந்திய இதழ்கள் மட்டுமல்லாது ஈழத்து இதழ்கள், புலம்பெயர் இதழ்கள் தொடர்பான தகவல்களையும் வெளியிட்டது.
பல நண்பர்கள் பொள்ளாச்சி நசனுக்கு இதழ்களையும் நூல்களையும் அனுப்பினர். அத்துடன் கனடா, பிரான்ஸ், சுவிஸ், மலேசியா, துபாய் போன்ற நாடுகளிலிருந்தும் இதழ்கள் அனுப்பப்பட்டன. இவ்வாறு சேகரித்துப் பாதுகாத்த நூல்களையும் இதழ்களையும் இணையத்தில் அனைவருக்கும் இலவசமாகவும் இலகுவாகவும் கிடைக்கச் செய்ய வேண்டும் என பொள்ளாச்சி நசன் விரும்பினார். அவ்வகையில் தமிழம் மின்னூலாக்கத் திட்டம் 09-10-2008 முதல் செயற்பட்டு வருகின்றது. அதில் இணைக்கப்பட்டிருக்கும் நூல்களை www.tamilzham.net என்ற இணைய தளத்தில் காணலாம்.!
அதே இணையதளத்தில் , தமிழைப் பயிற்றுவிக்கவும் முயற்சி செய்கிறார். 1999க்குப் பிறகு தாய்த்தமிழ் பள்ளிகளை பொள்ளாச்சி சூளேசுவரன்பட்டியில் தொடங்கி நடத்தி வருகிறார்.
அவரை அதிகாலை.காம் ஒரு பேட்டி எடுத்து வெளியிட்டிருக்கிறது.
அதனால் , செய்ற்கரிய செய்வர் பெரியர் என்ற முதுமொழிக்கு உகந்தவர் திரு.பொள்ளாச்சி நசன் என்பது உண்மைதானே?
அவருக்கு நமது நன்றிகளையும் , வணக்கங்களையும் , வாழ்த்துக்களையும் , பாராட்டுதல்களையும் சமர்ப்பிப்போம்..! அவரை அறிமுகப்படுத்துவதில் பெருமையடைகிறேன்.
இனி , அவர் சேகரித்து மின்னிதழாக வெளியிட்ட சில சிற்றிதழ்களிலிருந்து சில சுவாரசியமான எழுத்துக்கள்…..!
1955 ஆம் ஆண்டு புரட்டாசி மாதம் 15ஆம் திகதி வெளிவந்த தமிழ்முழக்கம் சிற்றிதழ் , உயர்திரு. கவி.கா.மு.ஷெரிப் அவர்களால் வெளியிடப்பட்டது.
பெரியாரையும் , அண்ணாதுரையும் விமர்சித்து ம.பொ.சியின் தமிழரசுக் கழகத்தின் எண்ணங்களை வெளிப்படுத்தும் ஒரு கட்டுரை என்னைக் கவர்ந்தது. அதில் வைக்கப்பட்டிருக்கும் முழுமையான விமர்சனங்களை ஏற்றுக்கொள்ள இயலாவிட்டாலும் , பெரியாரை நேசிக்கும் நான் பெரியாரிடம் முரண்படும் ஒரு விடயத்தைப் பற்றி அக்கட்டுரை விரிவாக அலசுகிறது. முழுக்கட்டுரைக்கு தமிழ் முழக்கம் இதழைப் பார்க்கலாம்.
பெரியாரின் “நாம் திராவிடர்கள்” என்ற கொள்கையிலிருக்கும் முரண்பாடுதான் அது. தமிழ்த்தேசியம் என்கிற கருத்துருவாக்கம் தமிழகத்தில் வலுப்பெற இன்றும் , அன்றும் தடையாக உள்ளதே “திராவிட”வியல் கருத்தாக்கம்…..அதையே முள்ளிவாய்க்கால் படுகொலையின் போது திராவிடத்தால் வயிறு வளர்க்கும் கட்சிகள் வாய்பொத்திக் கொண்டிருந்த நிகழ்வுகள் காட்டுகிறது.
சுதந்திரத்திற்குப் பின்னால் வந்த பாதி ஆண்டுகள் தமிழகத்தைத் தமிழரல்லாதவர்கள் ஆண்டதும் , இன்றைக்கு இருக்கும் திமுக , பாமக , விடுதலைச் சிறுத்தைகள் , புதிய தமிழகம் தவிர்த்த அனைத்துக்கட்சிகளின் தலைவர்களும் தமிழைத் தமது தாய்மொழியாகக் கொண்டிருக்காதவர்கள் என்ற வேதனையான உண்மையும் நம்மைச் சுட்டுகிறது. மாற்று மொழியாளர்களை நாம் நேசிக்காதவர்கள் கிடையாது. அதற்காக நம்மை நாமேதான் ஆளவேண்டுமே தவிர வேற்று மொழியாளர்கள் நம்மை ஆளவதை சகிக்க வேண்டுமானால் நாம் மெட்ராஸ் மாகாணமாகவே இருந்திருக்கலாமே?
அதே தமிழ் முழக்கத்திலிருந்த இன்னொரு அலசல் “இலங்கைச் செய்தி” என்ற தலைப்பில் வந்ததாகும். 1955 ஆம் ஆண்டே இலங்கையில் இன முரண்பாடு எந்த அளவிற்கு இருந்தது என்பதற்கான வரலாற்று ஆதாரம்…
இலங்கை இந்தியப் பிரதம மந்திரிகளினால் கைச்சாத்திடப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்ட டில்லி ஒப்பந்தத்தின் கொள்கைகளை அமல் படுத்தும் விடயத்தில் இலங்கை அரசாங்கம் நியாயமாக நடந்து கொள்ளவில்லையென்றும் , ஒப்பந்தத்தில் ஒப்புக்கொண்ட வாக்குறுதிகளுக்கு முற்றும் முரணாக இலங்கையரசாங்கம் நடந்து கொள்கிறது என்றும் பாரதப் பிரதமர் நேரு அவர்கள் குற்றம் சாட்டுவதாக அந்த அலசல் குறிப்பிடுகிறது.
அதோடு மட்டுமின்றி , வெகுவிரைவில் இலங்கையில் பொதுத்தேர்தல் நடக்கப்போவதாகவும் , இலங்கை இந்தியர்களின் மீது இலங்கையரசாங்கம் காட்டி வரும் அநீதியான கொள்கைகளை அடியோடு ஒழித்துக்கட்ட வரும் பொதுத்தேர்தல் மக்களுக்கு வாய்ப்பினை அளித்திருப்பதாகவும் சுட்டுகிறது அவ்வலசல்…
நேருவிற்குப் பின் பிரதமரான சாஸ்திரி அவர்கள் , இந்தியாவிற்கே பாதிக்கும் மேற்பட்ட மலையக இந்தியர்களை அழைத்துக்கொண்டார் என்பது நாம் இந்திய அரசாங்கத்தின் சொதப்பல்களின் வரலாறாக குறித்துக்கொள்வது முக்கியம்…..
அதே புரட்டாசி இதழில் கவி.கா.மு.ஷெரிப் எழுதிய கவிதையொன்று உங்களின் பார்வைக்கு…
(பல்லவி)
வாளினைக் கையில் எட்டா! – தோழா!
வையகம் உய்யும் வழிதனைச் செய்வோம் – நீ - (வா)
(அநுபல்லவி)
நாளெல்லாம் உழைத்து நலிகின்றான் ஏழை
நல்நிலை வாழ்வோர் உணர்வதாய் இல்லை – நீ – (வா)
(சரணம்)
ஆள்வோரும் செல்வாக்கே அடிமைக ளானார்
அறிஞரும் வள்ளலில் அடிபணி கின்றார்
தோள்வலி கொண்டநற் சுதந்திர வீரா!
துணிவுதான் இனிநம்மை வாழ்விக்கும் அறிந்தே – நீ – ( வா )
வாளினைக் கையில் எட்டா! – தோழா!
வையகம் உய்யும் வழிதனைச் செய்வோம் – நீ - (வா)
(அநுபல்லவி)
நாளெல்லாம் உழைத்து நலிகின்றான் ஏழை
நல்நிலை வாழ்வோர் உணர்வதாய் இல்லை – நீ – (வா)
(சரணம்)
ஆள்வோரும் செல்வாக்கே அடிமைக ளானார்
அறிஞரும் வள்ளலில் அடிபணி கின்றார்
தோள்வலி கொண்டநற் சுதந்திர வீரா!
துணிவுதான் இனிநம்மை வாழ்விக்கும் அறிந்தே – நீ – ( வா )
ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னர் எழுதிய இந்தக் கவிதை இன்றும் எப்படி பொருந்துகிறது என்ற உண்மையை வியந்து இந்தச்சிற்றிதழை எமக்குத் தந்த திரு.நசனுக்கு நன்றி கூறி இந்தப் பதிவினை முடிக்கிறேன்.
படங்கள் உதவி : அதிகாலை.காம்
பிரிதொரு சமயத்தில் பிடித்த இன்னொரு சிற்றிதழுடன் சந்திப்போம்…..
உயர்திரு.பொள்ளாச்சி நசனின் பணி சிறக்க வாழ்த்துவோம். நன்றி.!
Comments