Skip to main content

“திராவிடர் , தமிழர் , டெசோ”

மூலைக்கு முப்பதென இருக்கும் பலகட்சிகளின் பேரில் இன்னமும் திராவிடம் பட்டொளி வீசிப்பறக்கும் ஒரு சூழலில் , திராவிட இயக்கத்திற்கும் எழுச்சிக்கும் எவ்வகையிலும் சம்பந்தப்படாத விஜயகாந்த் போன்றவர்களும் திராவிடக் கட்சி நடாத்துகின்ற சூழலில் நாம் இருக்கிறோம்.

தமிழ் , தமிழர் என்று அனுதினமும் அள்ளியள்ளித் தெளித்த வசனங்களாலும் , வீராவேச கருத்துக்களினாலும் திராவிடம் தட்டி எழுப்பிய உணர்வோடே இங்கு அனேகர் ‘தமிழுணர்வு’ பெற்றிருக்கிறோம்.

தமிழகத்தில் எழுந்த திராவிட உணர்வே , புலிகளுக்கு உந்து சக்தியாக இருந்தது என்று அவ்வமைப்பின் முன்னாள் தலைவரும் , எஞ்சியிருக்கும் ஒரே மூத்த உறுப்பினருமான ‘ கே.பி ‘ அவர்கள் சொன்னதே தமிழர்தம் 20ம் நூற்றாண்டு வரலாற்றில் தமிழர்களின் வாழ்வில் திராவிட இயக்கத்தின் பங்கை வெளிக்காட்டும்.

தமிழர் திராவிடராயினரா ? இல்லை திராவிடர்கள் தமிழர்களாயினரா என்று பார்க்கப்போனால் இரண்டுமே வடிகட்டின பொய்யே…..வரலாற்றில் ஆங்காங்கே அள்ளித் தெளித்த ஓரிரு கருத்துக்களைக் கொண்டு கட்டமைக்கப்பட்டதே ‘திராவிடம்’ என்ற கருத்தாக்கம். அது முழுமையானதல்ல. திராவிடக்குட்பட்டோர் எனச்சொல்லப்படும் கன்னட , தெலுங்கு , மலையாள மொழி பேசுவோர் திராவிடவியல் கருத்தாக்கத்தை நிராகரித்திருக்கிறார்கள்…

முழுமையாக ஏற்றுக்கொள்ளப்படக்கூடாத ஒரு கருத்தியலை ஏன் பெரியாரும் இன்னபிற தலைவர்களும் எடுத்தாண்டார்கள்? எதனால் அதற்கான அவசியம் ஏற்பட்டது?

முதலில் அதற்கு திராவிடர் கழகம் உருவான சூழலை உற்று நோக்க வேண்டும்….. அப்போது மொழிவாரி மாகாணங்கள் பிரிக்கப்படாத ஒரு சூழல்… அரசாங்கம் மற்றும் அரசியல் பதவிகளில் , காங்கிரசுக் கட்சியில் பெரும்பாலோனோர் பார்ப்பனர்களாயிருந்தார்கள்.

பார்ப்பனரை எதிர்க்க ஒரே வழி , பார்ப்பனீயத்தை ஒழிப்பது. பார்ப்பனீயத்தை ஒழிக்க அதன் ஆணிவேரான வருணாசிரமத்தை , அதன் கடப்பாடுகளை மக்கள் மனதில் இருந்து அகற்றுவது. இவையே பெரியாரின் மனதில் இருந்திருக்க வேண்டும். வருணாசிரமக்கொள்கையை எதிர்ப்பதற்கு “தமிழர்” என்ற சொற்பதம் போதுமான பலமில்லாததாக அவர் கருதியிருக்கக் கூடும். அதுமட்டுமின்றி மொழிவாரி மாகாணங்களாக பிரிக்கப்படாத காரணத்தால்  மெட்ராஸ் பிரசிடென்சி என்றழைக்கப்பட்ட அந்தச்சூழலில் , பெரியாருக்கு இயல்பாகவே அவர் வேற்றுமொழி பேசும் சூழலில் இருந்து வந்தமையால் , திராவிடம் என்ற பொருளமை வார்த்தையே மிகுந்த பொருத்தமுடையாதாக இருந்திருக்கிறது.

இதுவே . திராவிடம் என்ற கருத்தாக்கம் பிற்கால தமிழகத்தில் வந்த வரலாறாக இருக்கவேண்டும். பெயர்தான் திராவிடமே தவிர அன்று முதல் இன்று வரை ‘தமிழ்த்தேசிய “ அரசியலே திராவிட இயக்கத்தால் எடுத்தாளப்பட்டிருக்கிறது..

இன்று ‘நாம் தமிழர்’ இயக்கம் என்பது பழைய மொந்தையில் புதிய கள் , அவ்வளவேதான்..

மக்களின் ஆதரவைப் பெற அன்றைக்கு ‘ திராவிடம் ‘ தேவைப்பட்டது. இன்றைக்கு தமிழ்த்தேசியம் தேவைப்படுகிறது... அதுவே வித்தியாசம்.

திராவிடம் திராவிடம் என்று பேசி ‘தமிழனை; நட்டாற்றீல் விட்டுவிட்டார்களெனப் பேசுவது ஏறிவந்த ஏணியினை எட்டி உதைப்பது போலாகும்.

தெளிவான சிந்தாந்த பலமுடைய கம்யுனிஸ்டு கட்சிகளே இன்று மக்கள் ஆதரவைப் பெறுவதிலிருந்து விலகிப்போய்விட்டார்கள்.

திராவிடமோ , தமிழ்த்தேசியமோ மக்களுக்கான அரசியலைச் செய்பவர்களே வெற்றி பெறுகிறார்கள் ,  மக்களின் செல்வாக்கைப் பெற்றுக்கொள்கிறார்கள்..

திராவிடம் வெற்றி பெற்றது ஆரியத்தை எதிர்ப்போம் என்று சொல்லி. இன்று தமிழ் தமிழ் என்று சொல்லி திராவிடத்தை எதிர்ப்பவர்கள் எதற்காக எதிர்க்கிறார்கள் என்று ஆராய்வோமானால் , அரசியலில் அவர்களுக்கென ஒரு இடத்தைப் பிடிக்க… அவர்களது பிழைப்புவாத அரசியலுக்கான வழி. அவர்கள் தமிழ்த்தேசியத்தை எட்டிப்பிடிக்க நாம் தடையேதும் சொல்லவில்லை. ஆனால் , அதற்காக திராவிட இயக்கத்தை தூற்றிப்பேசுவதைத்தான் சகித்துக்கொள்ள முடியவில்லை.

இவர்கள் எதைச் சாதித்துக்கொண்டபின் திராவிட இயக்கத்தை தூற்றிப்பேசுகிறார்கள்? இவர்கள் பேசவும் , எழுதவும் , இன்று பற்பல அரசியற்பணிகளைச் செய்வதற்கும் அடித்தளம் அமைத்தது திராவிட இயக்கம் என்பதை அறிவார்களா?

திராவிடம் சரியா , தவறா என்பதை விட , திராவிடம் தமிழுக்கும் , தமிழ்நாட்டிற்கும் செய்த நன்மைகள் என்னவென்பதை இவர்கள் அறிவார்களா?

‘நாம் தமிழர்’ கொள்கை விளக்கக் கையேட்டைப் பார்க்கும் போது , முதிர்ச்சியடையா , உணர்வுகளால் உந்தப்பட்ட சிலரது கருத்துக்களாகவே தோன்றியது..!

சமீபத்தில் ‘ சீமான்’ தாம் கொள்கை விளக்கத்தை வெளியிட்டதாலேயே அதை விமர்சிக்கிறார்கள் என்று சொல்லியிருந்தார். விமர்சிப்பதை தவிர்க்க வேண்டுமெனில் வெளியிட்டிருக்கவே கூடாதுதானே? இதுபோன்ற கொள்கைப் பிரகடனத்தை எந்த திராவிடக்கட்சியேனும் வெளியிட்டதுண்டா என்று கேட்டிருக்கிறார். திமுகவின் கொள்கைகளைப் பற்றி , அதன் விளக்கங்களைப் பற்றி பல புத்தகங்கள் இருக்கின்றனவே , அதைப் படித்ததில்லையோ அவர்?  ஒருவேளை அவர் அதிமுகவையோ அல்லது தேமுதிகவையோ சொல்லியிருப்பாரெனில் அவர்தம் அரசியல் புரிதலை செம்மைப்படுத்திக்கொள்ளல் தகும் , இரண்டு கட்சிகளும் திராவிடத்தை தம் பெயரில் மட்டுமே வைத்துக்கொண்டிருக்கின்றன.

திராவிடவியலும் , தமிழர் தம் அரசியலும் தண்டவாளம் போன்றவை… இணைந்தே பயணித்தாக வேண்டிய கட்டாயம் இருப்பினும் இணைவதற்கான வாய்ப்பில்லாத இரு கருத்துருவாக்கங்கள். தமிழர்தம் அரசியலுக்கு இரண்டுமே தேவையானவை. முன்னது காலச்சூழலால் ஏற்படுத்தப்பட்டிருந்தாலும் தவிர்க்கவியலாதது. பின்னது இன்றைய சூழலில் கட்டாயத்தேவை. திராவிடத்தை தூற்றாமல் தமிழ்த்தேசியத்தை வளர்த்தெடுக்க முடியும் , அதுபோன்ற ஒரு சூழலை உருவாக்க அர்த்தமுள்ள , தெளிவுள்ள மக்கட்தலைவரே காலத்தின் தேவை. அரைவேக்காடுகள் எத்தனை புழுதி வாரித்தூற்றினாலும் அத்தகைய தலைமையைத்தேடி எப்போதுமே திராவிடமும் , தமிழர் தேசியமும் பயணிக்கும்…பயணிக்க வேண்டும்!!



டெசோ பற்றிய கருத்தாக்கம் இதே வாரத்தில் பிரிதொரு நாளில் பகிர்ந்துகொள்ளப்படும்.

Comments

Popular posts from this blog

பூட்டிய இரும்புக்கூட்டின் கதவு திறக்கப்பட்டது!

சீமான்களின் சபையினிலேயே , கடிதம் எழுதி எழுதிக் களைத்துப்போனதோர் கிழட்டுச் சிங்கம்.....முன்னாலுக்கும் முன்னால் அவர் கொண்ட தமிழ்ப்பற்று.....இன்னாளில் அது தமது மக்கட்பற்றாய் மாறிப்போனதொரு சோகம். ஏதோவொரு புண்ணியத்தில், எவரோ செய்த வரலாற்றுத் தவறால் , கொள்கை , தொலைநோக்கு , மக்கட்பற்று இவை பற்றிய சிந்தையேதுமின்றி அரசியலில் விபத்தாய் விளைந்த கொடநாட்டு ஈழத்தாய்....தேர்தலுக்குத் தேர்தல் மட்டுமே தமிழர் பற்றியும் , தமிழர் அரசியல் பற்றியும் எழுதி வைத்துப் பேசும் செல்வி யவர்.........இன்னமும் அவர் சேலை பிடித்துத்திரியும் வீணர் கூட்டம்.! கூட்டணிக்கேற்றப்படி கொள்கையை மாற்றிக்கொள்ளும் மருத்துவப் படையாச்சி.........வீரமிகு வன்னியகுலத்திலே வந்துதித்த சந்தர்ப்பவாதச் சாக்கடை....சமரசமற்ற கொள்கை அரசியலை சந்தர்ப்பவாதச் சாக்கடைக்குள் தள்ளிய பெருமைக்குரிய மருத்துவர் தமிழ்க்குடிதாங்காத தமிழ்க்குடிதாங்கி! யாரை எதற்காக எதிர்த்து அரசியல் செய்யவேண்டுமே அவர்களோடே தம் தேவைக்குதந்த படி கூட்டு வைத்துக்கொண்டு ஈழத்திற்க்காய் எந்நேரமும் பாடுபடும் திரு.வைகோ அவர்கள்....அவரும் சிறை சென்றார்....

இதற்குத்தானா ஆசைப்பட்டீர்கள் திரு.சீமான்?

இன்று சீமான் அதிமுக கூட்டணியில் இருந்து பிரச்சாரம் பண்ணப்போவதாக ஒரு செய்தி வந்திருக்கிறது..ஏற்கெனவே ஒருமுறை செய்த பாரிய தவறொன்றை மற்றொருமுறை செய்யமாட்டார் என்றே நினைத்திருந்தேன்....இது உண்மையான செய்தியாய் இருந்தால் பேரிடிதான்..!!!! மாறாக உணர்வுள்ள இளைஞர்கள் தம் பின்னால் பேரெழுச்சியுடன் நாம் தமிழராய் எழும்போது.....அதைக்கொண்டுபோய் போய்ஸ்தோட்டத்திற்கு தாரைவார்த்துக்கொடுப்பதென்பது கனவிலும் சகிக்க முடியாத செயல்....!!  கருணாநிதிக்கு ஈழ அழிவிற்கு எவ்வளவுக்கெவ்வளவு பங்கிருக்கிறதோ அதே அளவிற்கு  சக பங்குள்ளவரே செயலலிதா... செயலலிதா என்ன செய்திருக்க வேண்டும்? என்ன செய்தார்? 1.எதிர்கட்சியாக மாபெரும் போராட்டங்களை நடாத்தியிருக்க வேண்டும்...அழிவது நம்சொந்தங்களே என்று தெரிந்திருந்தும் வாய்மூடி மெளனியாகவே இருந்தார். 2. கருணாநிதியின் எதிர்ப்பரசியலைக் கைவிட்டு விட்டு முத்துக்குமார் முதற்கொண்டு  தமிழக இளைஞர்களின் எழுச்சியை உபயோகித்து இந்திய அரசை ஸ்தம்பிக்க முயற்சித்திருக்க வேண்டும்....அதைவிடுத்து கொடநாட்டில் பள்ளி கொண்டிருந்தார்... 3.  சிறிதேனும் உண்மையான அக்கறை அவருக்கு தமிழர்பா...

நண்பர் 'டோண்டு' ராகவன்...

உயிரோடு இருக்கும்வரை அறிக்கைகளால் அர்சித்து எதிர்ப்பரசியல் நடாத்தி செத்துபோன பிறகு ஆருயிர் நண்பர் என்று அழைத்துக்கொள்ளும் எல்லா அரசியல்வாதிகளையும் போலவே நான். எனக்கும் மறைந்த உயர்திரு 'டோண்டு' ராகவன் அவர்களுக்குமான பரிச்சயம் அவ்வளவொன்றும் அதிகமில்லைதான். பதிவுலகையும் , பர்ஸனல் லைப்பையும் பிரித்து வைத்துக்கொள்ளும் எண்ணமுடைய நான் , டோண்டு மட்டுமல்ல மற்றபல பதிவுலக நண்பர்களுடனும் கூட தனிப்பட்ட தொடர்புகளை வைத்துக்கொண்டதில்லை... இருந்தாலும் , அவ்வப்போது பதிவுலக பின்னூட்டங்களின்பாலே தொடர்ந்துகொண்டிருந்த தொடர்பு , எனது 'போலி டோண்டு' பற்றிய கட்டுரையொன்றிலேயே  தீவிர விவாதமாக மாறியது.. ஆயிரம் விமர்சனங்கள் அவர் மீதோ இல்லை அவர்தம் பிற்போக்கான கருத்துக்கள் மீதோ இருந்திருக்கலாம். கடினமாக ஓரிரு முறை பேசியிருக்கலாம்.. அத்தனையும் தாண்டி அவர் மிக நல்ல மனிதர் , கடும் உழைப்பாளி என்பதை அவரது பதிவுலகம் மூலமாக அறிந்தவனெனினும் உறுதியாக கூறவியலும்.. அத்தகைய நல்ல மனிதரை இழந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கும் , நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்... வருத்தங்கள...