Skip to main content

உருவான டெசோ முதல் உருவாகாத ஈழம் வரை!

தோழர் ஆர். முத்துக்குமாரைப் பற்றி நாம் அறிமுகப்படுத்தவேண்டியதில்லை. அவரே நம்மை அறிமுகப்படுத்தும் நிலையில் இருக்கிறார். நாம் கொண்டுள்ள கருத்தையே அவரும் சுட்டுவதால் இக்கட்டுரை மீளப்பதிப்பிக்கிறோம்.! அவருடைய தளத்திற்குச் செல்ல இவ்விணைப்பை உபயோகிக்கவும்.

கருணாநிதி விரும்பினால் தமிழீழத்தைத் தமிழ்நாட்டுக்கு உள்ளேயே அமைத்துக்கொள்ளட்டும் என்று சீறியிருக்கிறார் இலங்கை அமைச்சர் கோத்தபய ராஜபட்சே. தமிழீழ ஆதரவாளர் அமைப்பைக் கழுத்தை நெரித்துக் கொன்றவரே கருணாநிதிதான் என்று கண்டிக்கிறார் வைகோ. அன்று காங்கிரஸோடு உறவுகொள்ள டெசோவைக் கலைத்த கருணாநிதி, தற்போது காங்கிரஸ் கூட்டணியில் இருந்து விலகிக்கொள்வதற்காக டெசோவைத் தொடங்கியிருக்கிறார் என்று குற்றம்சாட்டுகிறார் பழ. நெடுமாறன். ஆக, தமிழீழ எதிர்ப்பாளர்கள் தொடங்கி தமிழீழ ஆதரவாளர்கள் வரை பலரும் கலைஞரைக் கண்டிக்கிறார்கள். விமரிசிக்கிறார்கள். எதிர்க்கிறார்கள். அத்தனைக்கும் ஒரே காரணம், டெசோ.
 
ஈழத்தமிழர்களின் பிரச்னைகளுக்கு ஒரே தீர்வு தமிழீழம் மட்டுமே. அதுதான் என்னுடைய நிறைவேறாத கனவு. அந்தத் தமிழீழத்தை அடைவதற்காகவே தமிழீழ ஆதரவாளர் அமைப்பு என்கிற டெசோவை மீண்டும் தொடங்கி இருக்கிறோம் என்று கடந்த மாதம் அறிவித்தார் கலைஞர். அந்த நொடியில் இருந்தே எதிர்ப்புகள் வலுக்கத் தொடங்கிவிட்டன.

ஈழத்தமிழர்கள் கொன்றுகுவிக்கப்பட்ட சமயத்தில் அமைதியாக இருந்தவர்; இறுதி யுத்தத்தில் விடுதலைப்புலிகள் அழிக்கப்பட்டபோது அசைவற்று இருந்தவர்; நாடாளுமன்ற உறுப்பினர்கள் ராஜினாமா செய்வார்கள் என்ற முடிவை அறிவிப்பு அளவிலேயே முடித்துவிட்டவர்; உண்ணாவிரதம் என்ற பெயரில் நாடகம் நடத்தியவர்; விடுதலைப்புலிகள் மற்றும் ஈழத் தமிழர்களுக்கு எதிராக இலங்கை அரசுக்கு உதவிய காங்கிரஸ் கட்சியுடன் இன்னமும் உறவுடன் இருப்பவர்; அப்படிப்பட்ட கலைஞர் திடுதிப்பென டெசோவுக்கு உயிரூட்டி, தமிழீழம் பற்றிப் பேசுவதை ஏற்கமுடியாது என்கிறார்கள் தமிழகத்தில் இருக்கும் முக்கியமான ஈழ ஆதரவு இயக்கத்தினர்.

தற்போது காட்டமான மொழியில் விமரிசிக்கப்படும் கலைஞரும் அவர் உருவாக்கிய டெசோவும் எண்பதுகளின் மத்தியில் ஏற்படுத்திய தாக்கம் அபரிமிதமானது. இன்று கலைஞரையும் டெசோவையும் எதிர்க்கின்ற பலரும் அப்போது டெசோ என்ற ஒற்றைக் குடையின்கீழ் கலைஞருடன் கரம்கோத்து இயங்கியவர்கள். முக்கியமாக, பழ. நெடுமாறனும் வைகோவும் கலைஞருக்கு அணுக்கமாக இருந்து டெசோவில் இயங்கியவர்கள்.

இலங்கையில் ஈழத்தமிழர்கள் மீதான தாக்குதல் தொடர்ச்சியாக நடந்து கொண்டிருந்தபோதும் அது உச்சத்தை எட்டியது 1983ல் நடந்த ஜுலை கலவரத்தின்போதுதான். தமிழ்நாட்டில் ஈழத்தமிழர்களுக்கு ஆதரவுத்தளம் வலுப்பெறத் தொடங்கியதும் அதன்பிறகுதான். ஜூலை கலவரத்துக்குப் பிறகு கொஞ்சம் அடங்கியிருந்த தாக்குதல் 1985ல் மீண்டும் வலுப்பெறத் தொடங்கியது. ஈழத்தமிழர்கள் கொல்லப்படுவதும் அகதிகளாகத் தமிழகத்துக்கு வருவதும் அதிகரிக்கத் தொடங்கின. அப்போது 13 மே 1985 அன்று தமிழ்நாட்டில் உருவாக்கப்பட்ட அமைப்பே தமிழீழ ஆதரவாளர் அமைப்பு (Tamil Eelam Supporters' Organization). சுருக்கமாக, டெசோ.

டெசோவின் தலைவராக கலைஞரும் மற்ற உறுப்பினர்களாக திமுக பொதுச்செயலாளர் க. அன்பழகன், திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் கி.வீரமணி, தமிழ்நாடு காமராஜ் காங்கிரஸ் தலைவர் பழ. நெடுமாறன், ஃபார்வர்ட் ப்ளாக் தலைவர் அய்யணன் அம்பலம் ஆகியோர் இருந்தனர். அப்போதே ஆளுங்கட்சியான அதிமுகவின் ஆதரவை டெசோ பெறுமா என்ற கேள்வி எழுந்தது. தமிழீழ கோரிக்கையை அதிமுக பகிரங்கமாக ஏற்கும் பட்சத்தில் மட்டுமே ஆதரவைக் கோருவது பற்றி யோசிக்கமுடியும் என்று பதிலளித்திருந்தார் பழ. நெடுமாறன்.

டெசோ தொடங்கப்பட்டபோது மூன்று முக்கியக் குறிக்கோள்கள் அறிவிக்கப்பட்டன. ஈழத்தமிழர் பிரச்னைகள் தீர்வதற்கு ஒரே வழி தமிழீழம் மட்டுமே என்பதை இந்தியாவின் மற்ற மாநிலங்களும் உலக நாடுகளும் உணர்வதற்கும் தக்க ஆதரவைத் திரட்டுவதற்கும் உரிய நடவடிக்கைகளை எடுப்பது முதல் குறிக்கோள். தமிழீழ விடுதலைப் போராளிகளுக்கு (புலிகளுக்கு மட்டுமல்ல) உதவுவதும் ஈழ அகதிகளுக்கு உரிய உதவிகள் கிடைக்க ஆவன செய்வதும் மற்ற குறிக்கோள்கள்.

தமிழீழ கோரிக்கையை வலியுறுத்தி டெசோவைச் சேர்ந்த தலைவர்களும் பேச்சாளர்களும் தமிழகம் முழுக்கத் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டனர். தமிழகத்தின் மூலை முடுக்குகளில் எல்லாம் ஈழம் என்ற சொல் சென்று சேர்ந்ததன் பின்னணியில் டெசோவின் பங்களிப்பு மிக அதிகம். குறிப்பாக, கலைஞர், அன்பழகன், வீரமணி, வைகோ, நெடுமாறன் உள்ளிட்டோர் தொடர் பிரசாரத்தில் ஈடுபட்டனர். தெருமுனைகளில். தேநீர்க்கடைகளில். கல்லூரிகளில். பொது இடங்களில்.. என்று எங்கு பார்த்தாலும் ஈழம் பற்றியே பேசப்பட்டது.

அந்தச் சமயத்தில்தான் இலங்கை அரசுக்கும் தமிழீழப் போராளிகளுக்கும் இடையே பூடான் தலைநகர் திம்புவில் பேச்சுவார்த்தை நடந்தது. பேச்சுவார்த்தை நடந்துகொண்டிருக்கும் சமயத்திலேயே இலங்கை ராணுவத் தாக்குதலில் தமிழர்கள் கொல்லப்பட்ட செய்தி வந்து சேர்ந்தது. அந்த நொடியிலேயே பேச்சுவார்த்தை முறிந்துபோனது.

அதன் தொடர்ச்சியாக சென்னையில் தங்கியிருந்த ஈழப்போராளிகளை வெளியேற்ற முடிவுசெய்தது ராஜீவ் காந்தி தலைமையிலான மத்திய அரசு. முக்கியமான போராளித்தலைவர்களான ஆண்டன் பாலசிங்கம், சந்திரஹாசன், சத்தியேந்திரா ஆகியோரை நாடு கடத்த உத்தரவிட்டது மத்திய அரசு. நாடு கடத்தல் உத்தரவுக்கு எதிராகப் போராட்டத்தில் இறங்கியது டெசோ. 25 ஆகஸ்டு 1985 அன்று தமிழ்நாட்டில் பிரும்மாண்டமான கண்டனப் பேரணியை நடத்தியது டெசோ.

லட்சக்கணக்கானோர் கலந்துகொண்ட பேரணியைத் தொடர்ந்து போராளிகள் மீதான நாடு கடத்தும் உத்தரவைத் திரும்பப்பெறவேண்டும் என்று பிரதமர் ராஜீவைக் கேட்டுக்கொண்டது டெசோ. நாடு கடத்தல் உத்தரவை ரத்து செய்யக்கோரி ரயில் நிறுத்தப் போராட்டம் ஒன்றுக்கும் அழைப்பு விடுத்தது டெசோ. 30 ஆகஸ்டு 1985 அன்று தமிழகத்தில் எந்த ஊரிலாவது ரயில் ஓடினால் அங்கே தமிழனே இல்லை என்று அத்தம் என்று பேசி போராட்டத்துக்கு ஆதரவு திரட்டினார் கருணாநிதி. பேரணி, மறியலைத் தொடர்ந்து நாடு கடத்தும் உத்தரவுகளைத் திரும்பப் பெற்றது மத்திய அரசு.

இது டெசோவின் முக்கிய சாதனை. ஈழத் தமிழர் பிரச்னைகள் குறித்து தமிழகம் தழுவிய அளவில் பேரணிகளையும் பொதுக் கூட்டங்களையும் நடத்தியது டெசோ.

1986 பிப்ரவரி, மார்ச் மாதங்களில் மீண்டும் ஈழத்தமிழர்கள் மீது வன்முறை அதிகரித்தது. ஒரே நாளில் அறுபதுக்கும் மேற்பட்ட தமிழர்கள் கொல்லப்பட்ட செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதன் தொடர்ச்சியாக 26 மார்ச் 1986 அன்று டெசோ அவசரமாகக் கூடியது. ஈழத்தமிழர் பிரச்னையை தமிழக அளவோடு நிறுத்தாமல் தேசிய அளவில் கொண்டுசெல்ல முடிவுசெய்யப்பட்டது. அகில இந்தியத் தலைவர்களை வரவழைத்து, இலங்கைத் தமிழர் பாதுகாப்பு மாநாட்டை மதுரை நடத்தத் தீர்மானிக்கப்பட்டது.

4 மே 1986 அன்று கூடிய மாநாட்டில் தமிழகத்தைச் சேர்ந்த அரசியல் தலைவர்கள் பலரும் கலந்துகொண்டனர். அகில இந்திய தலைவர்களான அடல் பிகாரி வாஜ்பாய், என்.டி. ராமராவ், பகுகுணா, உபேந்திரா, ஜஸ்வந்த் சிங் உள்ளிட்டோர் வந்திருந்தனர். முக்கியமாக, விடுதலைப் புலிகள் உள்ளிட்ட ஈழப்போராளி இயக்கங்களும் தத்தமது பிரதிநிதிகளை அனுப்பியிருந்தன. மாநாடு தொடங்குவதற்கு முன்னரே விடுதலைப் புலிகளுக்கும் டெலோ இயக்கத்தினருக்கும் இடையே மோதல்கள் நடந்ததாக செய்திகள் வந்திருந்தன. அதன் எதிரொலியாகவே, தமிழீழத்தை வென்றெடுக்க உழைக்கும் ஈழப்போராளிகளுக்குள் ஒற்றுமை அவசியம் என்ற கருத்து மாநாட்டில் முன்வைக்கப்பட்டது.

உரிமைகள் பறிக்கப்பட்டு, இனப் படுகொலைக்கு ஈழத்தமிழர்கள் ஆளாக்கப்பட்டு வருகின்ற பிரச்னை தீர்வதற்கு தமிழீழத் தனிநாடு அமைவதைத்தவிர தகுந்த வழியில்லை என்ற உண்மையை இந்தியாவில் உள்ள அனைவரும், உலகநாடுகளும் உணரச் செய்வதற்கு உரிய நடவடிக்கைகளை நான் மேற்கொள்வேன் என்று மேடையில் கலைஞர் சொல்லச்சொல்ல, மாநாட்டுக்கு வந்திருந்த அனைவரும் அதனைத் திரும்பச்சொல்லி, உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். தமிழகம் சந்தித்த மிகப்பெரிய ஈழத்தமிழர் ஆதரவு மாநாடு அதுவாகத்தான் இருக்கும்.

மாநாடு முடிந்த இரண்டாவது நாள் டெலோ இயக்கத் தலைவர் சபாரத்னத்தை விடுதலைப்புலிகள் கொலை செய்தனர். போராளிகளுக்கு இடையே ஒற்றுமை உணர்வு அவசியம் என்று டெசோ தலைவர்கள் தொடர்ச்சியாக வலியுறுத்திக் கொண்டிருந்த சூழ்நிலையில் சபாரத்னம் கொல்லப்பட்டது நிலைமையை விகாரமாக்கியது.

இந்த இடத்தில் இன்னொரு முக்கியமான விஷயத்தைத் தெளிவுபடுத்த வேண்டும். ஈழத்தில் பல போராளிக்குழுக்கள் இருந்தன. அவர்கள் தமிழகத்தில் இயங்கியபோது ஒவ்வொரு அமைப்பை ஒவ்வொரு கட்சி ஆதரித்தது. சில அமைப்புகளை பல கட்சிகள் ஆதரித்தன. குறிப்பாக, விடுதலைப்புலிகளை எம்.ஜி.ஆர் தீவிரமாக ஆதரித்தார். மேலும், கி. வீரமணி பழ.நெடுமாறன் போன்றவர்கள் ஈழப்போராளிகள் பலருடனும் தொடர்புகள் வைத்துக் கொண்டாலும் புலிகளையே தீவிரமாக ஆதரித்தனர். டெலோ இயக்க்கத்தை திமுகவும் கலைஞரும் ஆதரித்தனர். கம்யூனிஸ்ட் கட்சியினர் பத்மநாபாவை ஆதரித்தனர். கம்யூனிஸ்ட் கட்சியிலேயே தீவிரமாக செயல்படக்கூடிய சிலர் ஈராஸ் இயக்கத்டை ஆதரித்தனர். பெருச்சிந்திரனார் உள்ளிட்ட சிலர் முகுந்தன் தலைமையிலான ப்ளாட் இயக்கத்தை ஆதரித்தனர். போராளிகளுக்குள் மோதல் வந்தபோது அது இங்கே கட்சிகளுக்கு இடையிலான உரசலாகவும் பார்க்கப்பட்டது.

டெலோவின் சபாரத்னத்தை விடுதலைப்புலிகள் கொன்றுவிட்டார்கள் என்பதில் கலைஞருக்கு நிறைய கோபம். உண்மையில், சபாரத்னத்தின் கொலைக்கு முன்னால் இன்னொரு முக்கியச் சம்பவம் நடந்திருந்தது. ஆம். பேச்சுவார்த்தைக்காகச் சென்ற விடுதலைப்புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த தளபதி லிங்கத்தை சபாரத்னம் கொடூரமான முறையில் கண்களைத் தோண்டியெடுத்துக் கொலைசெய்திருந்தார். அதன் எதிர்வினையாகவே சபாரத்னம் கொல்லப்பட்டிருந்தார்.

சகோதர யுத்தம்தான் ஈழப்பிரச்னை தீர்க்கப்படாமல் இருப்பதற்கு முக்கியக் காரணம் என்று இன்றைய தேதிவரை கலைஞர் கூறிவருவதற்கு அடிப்படையாக அமைந்தது இந்தப் படுகொலைதான். தான் தீவிரமாக ஆதரித்த டெலோ இயக்கத்தைச் சேர்ந்த தலைவரான சபாரத்னம் கொல்லப்பட்டது கலைஞரை பலத்த அதிருப்தியில் ஆழ்த்தியது. அதன் தொடர்ச்சியாக டெசோவின் செயல்பாடுகள் மெல்ல மெல்ல குறைந்தன. பிறகு டெசோ அமைப்பு கலைக்கப்பட்டதாக அறிவித்து விட்டார் கலைஞர். என்னுடனும் வீரமணியுடனும் கலந்து பேசாமல் தன்னிச்சையாக டெசோவைக் கலைத்துவிட்டார் கலைஞர் என்று விமரிசனம் செய்தார் பழ. நெடுமாறன்.

இடைப்பட்ட காலத்தில் பல அரசியல் மாற்றங்கள். எம்.ஜி.ஆர் மரணம். ராஜீவ் கொலை. இந்தியாவிலும் இலங்கையிலும் ஆட்சி மாற்றங்கள். தமிழகத்திலும் ஆட்சி மாற்றங்கள். அமைதிப் பேச்சுவார்த்தைகள். இறுதி யுத்தம். எல்லாம் முடிந்து தற்போது ஈழத்தமிழர்கள் முள்வேலிகளுக்குள் முடங்கிக் கிடக்கிறார்கள்.

இனி ஈழத்தமிழர்களுக்கு விடிவே இல்லை என்று நினைத்த சமயத்தில்தான் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை ஆணையம் களத்தில் இறங்கியது. இறுதி யுத்தத்தின்போது போர்க்குற்றத்தில் ஈடுபட்ட இலங்கை அரசுக்கு எதிராகத் தீர்மானம் கொண்டுவரப்பட்டது. அதற்கு இந்தியா ஆதரவு தெரிவிக்க வேண்டும் என்று பலத்த அழுத்தங்கள் தரப்பட்டன. குறிப்பாக, தமிழகத்தில் அதிமுக, திமுக உள்ளிட்ட பல கட்சிகளும் வலியுறுத்தின. அதன் எதிரொலியாக அந்தத் தீர்மானத்தை இந்தியா ஆதரித்தது. அதன்மூலம் ஈழப்பிரச்னைக்கு ஒரு சர்வதேச கவனம் கிடைத்தது.

சர்வதேச அளவில் ஈழப்பிரச்னையை எடுத்துச்செல்வதற்குக் கிடைத்திருக்கும் வாய்ப்பைக் கச்சிதமாகப் பயன்படுத்தவேண்டும்; ஈழத்தில் பொதுவாக்கெடுப்பு நடத்தவேண்டும் என்ற கோரிக்கையை எழுப்பவேண்டும்; அதற்கு டெசோவைப் புதுப்பிக்கவேண்டும் என்று கருத்து தெரிவித்தார் திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி. அதன் தொடர்ச்சியாகவே மீண்டும் டெசோ உருவாக்கப்படுகிறது என்ற அறிவிப்பை வெளியிட்டார் கலைஞர்.

புதிய டெசோவுக்கும் கலைஞரே தலைவர். உறுப்பினர்களில் பட்டியலில் மீண்டும் க. அன்பழகனும் கி.வீரமணியும் இடம்பெற்றுள்ளனர். ஆனால் முந்தைய டெசோவின் முக்கிய உறுப்பினரான பழ. நெடுமாறன் தற்போது கலைஞருக்கு எதிரணியில் இருக்கிறார். ஆகவே, அவருடைய இடத்துக்கு திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் தலைவர் சுப. வீரபாண்டியன் வந்திருக்கிறார். திமுகவில் இருக்கும் தீவிர விடுதலைப்புலி ஆதரவாளர் என்று அறியப்பட்ட சுப்புலட்சுமி ஜெகதீசனும் டெசோவில் இடம்பெற்றுள்ளார்.

மீண்டும் டெசோ தொடங்கப்படும் என்று கலைஞர் அறிவித்தபோதே சர்ச்சைகளும் கேள்விகளும் அணிவகுக்கத் தொடங்கிவிட்டன. அவற்றில் பல கேள்விகள் நியாயமானவை. உதாரணமாக, திமுகவுடன் அணுக்கமாக இருக்கும் ஈழ ஆதரவாளர்களில் ஒருவரான திருமாவளவனுக்குப் புதிய டெசோவில் இடமில்லை. இதுவிஷயமாகத் தனது அதிருப்தியை வெளிப்படையாகப் பதிவுசெய்திருக்கிறார் திருமாவளவன்.

இலங்கை இறுதி யுத்தத்தின்போது மௌனம் காத்த திமுக, தற்போது திடீரென தமிழீழத்தைக் கையில் எடுத்திருப்பது ஏன்? என்ற கேள்வி எழுகிறது. ஆளுங்கட்சியாக இருக்கும்போது அமைதியாக இருக்கும் திமுக, எதிர்கட்சிக்கு வந்துவிட்டால் ஈழத்தை முன்னெடுக்கும் என்ற விமரிசனத்துக்கு மேலே இருக்கும் கேள்வி வலுசேர்க்கிறது.

தமிழீழம் என்ற இலக்கை அடையவேண்டும் என்றால் ஈழத்தை முன்னிறுத்தும் அத்தனை இயக்கங்களும் ஓரணியில் திரளவேண்டும். ஆனால் தொடக்க நிலையிலேயே ஈழ ஆதரவு இயக்கங்களான தமிழர் தேசிய இயக்கம், மதிமுக, பாமக, நாம் தமிழர் போன்ற இயக்கங்கள் டெசோவைத் தீவிரமாக எதிர்க்கின்றன. அந்த எதிர்ப்புகளை எல்லாம் சமாளித்து, சமாதானம் செய்து, அனைத்து ஈழ ஆதரவு இயக்கங்களையும் ஓரணியில் திரட்டுவதுதான் டெசோவில் ஆகப்பெரிய சவால்.

நடந்தவை நடந்தவைகளாக இருக்கட்டும், இனி நடப்பவை நல்லவைகளாக இருக்கட்டும் என்று சமீபத்தில் நடந்த புத்தக வெளியீட்டுவிழாவில் பேசியிருக்கிறார் கலைஞர். ஆக, அனைத்து ஈழ அமைப்புகளின் ஒருங்கிணைப்பைச் செய்துமுடித்துவிட்டால் தமிழீழத்துக்கான வாய்ப்புகள் வலுப்பெறும். இன்னும் சொல்லப் போனால், டெசோவை ஆதரிக்காவிட்டாலும் பரவாயில்லை. டெசோவை விமரிசிக்காமல் இருப்பது ஈழத்தமிழர்களுக்கு நல்லது.

அதேசமயம், புதிய டெசோவின் செயல்திட்டம் என்ன என்பதையும் கவனிக்கவேண்டும். கடந்த முறை டெசோ உருவானபோது தேசியத் தலைவர்கள் மத்தியில் திமுகவுக்கும் கலைஞருக்கும் கணிசமான செல்வாக்கு இருந்தது. அதனைக்கொண்டு பல தேசிய தலைவர்களைத் தமிழீழத்துக்கு ஆதரவாக ஒரே மேடையில் திரளவைத்தது. தற்போதும் திமுகவுக்கு தேசியக் கட்சித்தலைவர்கள் மத்தியில் கணிசமான செல்வாக்கு இருக்கத்தான் செய்கிறது. ஆனால் அதனை ஈழத்துக்கு ஆதரவான ஒருங்கிணைப்புக்குப் பயன்படுத்த முடியுமா என்பதுதான் சந்தேகமாக இருக்கிறது.

எந்தவொரு பிரச்னையும் செல்வாக்கு மிகுந்த இயக்கத்தால் முன்னெடுக்கப்படும்போது அதற்கான வீரியம் அபரிமிதமாகவே இருக்கும். இது ஈழப்பிரச்னைக்கும் பொருந்தும். தமிழ்நாட்டில் இரண்டு பெரிய கட்சிகள் இருக்கின்றன. இரண்டு பெரிய தலைவர்கள் இருக்கிறார்கள். கலைஞர் மற்றும் ஜெயலலிதா. இந்த இருவரில் தமிழீழ கோரிக்கைக்கு யார் நெருக்கமாக இருந்திருக்கிறார்கள், இருக்கிறார்கள், இருப்பார்கள் என்பதையும் பார்க்க வேண்டும்.

கலைஞரை விமரிக்கவும் கண்டனம் செய்யவும் வேறு களங்கள் இருக்கின்றன. ஆகவே, கலைஞரை விமரிசிக்கக் கிடைத்துள்ள வாய்ப்பாக டெசோவைப் பார்க்காமல், கோடிக்கணக்கான தொண்டர்களைக் கொண்ட ஒரு கட்சி தமிழீழ கோரிக்கையை வலியுறுத்தி, மீண்டும் போராட்டக் களத்துக்கு வந்துள்ளது என்று பார்க்கவேண்டும். அந்த வகையில் தமிழகத்தின் முக்கியக் கட்சியான திமுகவின் பங்களிப்போடு மறுகட்டுமானம் செய்யப்பட்டுள்ள டெசோ தற்போதுள்ள சூழ்நிலையில் அவசியம் மட்டுமல்ல; அத்தியாவசியமான ஒன்றும்கூட!.

 இது தொடர்பில் நாம் முன்பெழுதிய ஒரு கட்டுரை இச்சுட்டியில் படிக்கலாம்.

Comments

மதுபாலா!நலமாக இருக்கிறீர்களா!தமிழ்மணத்தில் காண கிடைப்பதில்லையே!

பெரும்பாலான தமிழர்கள் உணர்வுபூர்வமாகவும்,அறிவுபூர்வமாகவும் ஒன்றிணைந்து ஈழப்பிரச்சினையையும் டெசோவையையும் நோக்குகிறார்கள்.முந்தைய டெசோ காலத்து கலைஞரின் நிலைப்பாட்டுக்கும்,முந்தைய தி.மு.க வின் ஆட்சிக்காலத்தின் நிலைப்பாட்டிற்கும் உள்ள வேறுபாடுகள்,ஈழப்பிரச்சினையின் குளறுபடிகள் டெசோ மீதான நம்பிக்கையை இழக்க வைக்கிறது.இதில் பெரும்பாலோனார்க்கு உணர்வுகள் வென்று விடுகிறது.இதில் மொத்த ஈழ ஆதரவாளர்களும் அடக்கம்.ஆனால் கலைஞர் மீதான விமர்சனங்கள் ஒரு புறமும் டெசோவை ஆதரிக்க வேண்டிய அவசியத்தின் சிக்கல்கள் உருவாகின்றன.இதனை எப்படி வெற்றி கொள்வது?

நேற்று எலிசபெத் மகாராணியின் வைரவிழாவில் ராஜபக்சேவுக்கான அழைப்பு ஒரு புறமும் அதே நேரத்தில் புலம்பெயர் தமிழர்களின் போராட்டங்களை அனுமதித்து செயல்பட்ட பிரிட்டனின் நிலைப்பாட்டில் தமிழர்கள் உள்ளோம்.

கலைஞரே விரும்பினாலும் கூட கலைக்க முடியாத கறையை அவரது ஆட்சிக்காலத்தில் உருவாக்கி கொண்டார் என்ற வரலாற்றை இனி மாற்ற இயலாது.ஆனால் டெசோ என்ற ஆயுதத்தையும் இணைந்து பயன்படுத்த இயலும் என்ற நிலையில் தமிழர்கள் உள்ளோம்.

விமர்சனங்கள் ஒரு புறமும் டெசோ ஆதரவு மறுபுறமும் என்ற நிலையில் பயணிப்பது மட்டுமே தமிழீழம் என்ற நோக்கில் பயணிக்க உதவும்.

மொத்த ஈழ ஆதரவு தலைமைகளில் டெசோவும் ஒரு ஆயுதமே.ஆனால் அனைவரும் இணையாத பட்சத்தில் அது மட்டுமே வெற்றியை நிர்ணயித்து விடாது.
வாங்க திரு. பின்னூட்டம் 'ராஜ நடராஜன்' அவர்களே..எப்போதும் என்னை ஊக்குவிப்பதில் முதன்மையாளரான உங்களது பின்னூட்டம் அளவிலா மகிழ்ச்சி தருகிறது.

வேலைப்பளுவினாலும் மற்ற இன்னபிற காரணங்களினாலும் தற்போதைக்கு எழுதுவதை வலுக்கட்டாயமாக்க குறைத்துக்கொண்டேன்... பழைய வலைப்பூவையும் கூட பொதுப்பார்வையிலிருந்து விலக்கி வைத்தாகி விட்டது .


அதனால் எப்போதாவதுதான் தமிழ்மண வாசம் எனது நெருப்புநரியில் வீசுகிறது... தவிர இடுகைக்கு வருவோம்.... நான் எப்போதுமே திமுக அனுதாபி என்பது உங்களுக்குத் தெரியும் , ஒரூவேளை இந்த இடுகையை நான் அந்தப்பார்வைக்கு வலுச் சேர்க்க எடுத்தாண்டிருக்கக் கூடும். எது எப்படியாகினும் , யார் குத்தியாகிலும் நெல் உமியாகவும் அரிசியாகவும் ஆகட்டுமே என்ற நல்லெண்ணத்துடனே இந்தப் பதிவினை காப்பி பேஸ்டி இருப்பதாக எடுத்துக்கொள்ளவும்...

வீட்டில் நலமா? தற்போதைய வலையுலகம் பற்றியும் உரையாட ஆசை. தங்களுக்கு நேரமிருப்பின் மின்னஞ்சலில்!
மொத்த ஈழ ஆதரவு தலைமைகளில் டெசோவும் ஒரு ஆயுதமே.ஆனால் அனைவரும் இணையாத பட்சத்தில் அது மட்டுமே வெற்றியை நிர்ணயித்து விடாது.//

சொல்ல மறந்த ஒன்று..!!! ( நாம் சொன்னாலும் ஒரு எழவும் மாறப்போவதில்லையெனினும்.)

அனைவரும் இணையாவிட்டால் 'டெசோ' பயனளிக்காது என்பது எப்படி அக்மார்க் உண்மையோ அது போலத்தான் வெகுஜன அரசியல்கட்சிகளற்ற த.பெ.தி.க , நெடுமாறன் , மதிமுக , நாம் தமிழர்' இவர்களின் முயற்சியும் எந்தப் பலனும் அளிக்காது. மக்கள் ஆதரவு பெற்ற திமுகவோ , அதிமுகவோ நிச்சயம் பின்புலமாக இருந்தாக வேண்டும். அதிமுகவைக் காட்டிலும் பலமடங்கு திமுகவின் ஆதரவு வலுவினைத் தரும் என்பதே எம் கருத்து.!
மதிபாலா!உங்கள் மறுமொழி காண மீண்டும் ஒரு முறை வந்தேன்.நீங்கள் சொல்லித்தான் உங்களது பழைய இடுகைகள் காணவில்லையென்பதை அறிந்தேன்.நன்றாகவும்,ஆழமான கருத்துக்களைத்தானே முன்வைத்துக்கொண்டிருந்தீர்கள்.கடையை மாற்ற வேண்டிய அவசியம் ஏன்?உங்கள் ஈழம் குறித்த கட்டுரைகள் கால ஓட்டத்தில் மீண்டும் மீள்பார்வை செய்யப்பட வேண்டியவைகளாயிற்றே!

கலைஞர் மீதான விமர்சனங்களுக்கு மத்தியிலும் தி.மு.க தமிழகத்தின் தவிர்க்க முடியாத இயக்கம் என்பதும் உண்மையே.ஏனைய இயக்க தலைமைகள் உணர்வு பூர்வமாக போராடினாலும் கூட நீங்கள் சொன்னது போல் இரண்டு முன்ணணி கழகங்களில் ஏதாவது ஒன்றுடன் இணைந்து முன்னிலை வகிக்கும் பட்சத்திலேயே மொத்த ஆதரவுக்கான வலு கூடும்.

என்னுடைய மின்னஞ்சல் முகவரி rajanatcbe@gmail.
உங்கள் வலைபதிவை வலைச்சரத்தில் குறிப்பிடும் வாய்ப்பு கிடைத்தது. நேரம் இருப்பின் பார்த்து கருத்திடவும்
http://blogintamil.blogspot.in/2012/06/5.html
arul said…
teso cannot bring any change in the lives of srilankan tamils in this situation
மதிபாலா!உங்கள் மறுமொழி காண மீண்டும் ஒரு முறை வந்தேன்.நீங்கள் சொல்லித்தான் உங்களது பழைய இடுகைகள் காணவில்லையென்பதை அறிந்தேன்.நன்றாகவும்,ஆழமான கருத்துக்களைத்தானே முன்வைத்துக்கொண்டிருந்தீர்கள்.கடையை மாற்ற வேண்டிய அவசியம் ஏன்?உங்கள் ஈழம் குறித்த கட்டுரைகள் கால ஓட்டத்தில் மீண்டும் மீள்பார்வை செய்யப்பட வேண்டியவைகளாயிற்றே! ///

உண்மைதான். எழுதியவற்றை மீளப்படிப்பதே ஒரு சுவையான அனுபவம்..அதிலும் உணர்வு வேகத்தில் எழுதியவற்றை அவ்வுணர்ச்சி தணிந்ததும் படிப்பது பலே அனுபவம். ஹஹ்ஹாஹஹ்.// கலைஞர் மீதான விமர்சனங்களுக்கு மத்தியிலும் தி.மு.க தமிழகத்தின் தவிர்க்க முடியாத இயக்கம் என்பதும் உண்மையே.ஏனைய இயக்க தலைமைகள் உணர்வு பூர்வமாக போராடினாலும் கூட நீங்கள் சொன்னது போல் இரண்டு முன்ணணி கழகங்களில் ஏதாவது ஒன்றுடன் இணைந்து முன்னிலை வகிக்கும் பட்சத்திலேயே மொத்த ஆதரவுக்கான வலு கூடும்.

//

உண்மையே. நன்றி உங்கள் ஆழமான பின்னூட்டத்திற்கு.
உங்கள் வலைபதிவை வலைச்சரத்தில் குறிப்பிடும் வாய்ப்பு கிடைத்தது. நேரம் இருப்பின் பார்த்து கருத்திடவும்
http://blogintamil.blogspot.in/2012/06/5.html//

நன்றி திரு.முரளிதரன். படித்தேன் , அத்தனை இணைப்பும் வலைச்சரத்தில் பூத்த முத்துச்சரம். வாழ்த்துக்கள். நன்றி எனது பதிவையும் அதில் இணைத்ததற்கு!
Blogger arul said...

teso cannot bring any change in the lives of srilankan tamils in this situation//

உண்மைதான். 'டெசோ' மட்டுமே எதையும் சாதித்துவிடாது.
Anonymous said…
never trust political leaders of tamilnadu...u will suffer further.singhala politicians are more transparent than TN politicians.

Popular posts from this blog

பூட்டிய இரும்புக்கூட்டின் கதவு திறக்கப்பட்டது!

சீமான்களின் சபையினிலேயே , கடிதம் எழுதி எழுதிக் களைத்துப்போனதோர் கிழட்டுச் சிங்கம்.....முன்னாலுக்கும் முன்னால் அவர் கொண்ட தமிழ்ப்பற்று.....இன்னாளில் அது தமது மக்கட்பற்றாய் மாறிப்போனதொரு சோகம். ஏதோவொரு புண்ணியத்தில், எவரோ செய்த வரலாற்றுத் தவறால் , கொள்கை , தொலைநோக்கு , மக்கட்பற்று இவை பற்றிய சிந்தையேதுமின்றி அரசியலில் விபத்தாய் விளைந்த கொடநாட்டு ஈழத்தாய்....தேர்தலுக்குத் தேர்தல் மட்டுமே தமிழர் பற்றியும் , தமிழர் அரசியல் பற்றியும் எழுதி வைத்துப் பேசும் செல்வி யவர்.........இன்னமும் அவர் சேலை பிடித்துத்திரியும் வீணர் கூட்டம்.! கூட்டணிக்கேற்றப்படி கொள்கையை மாற்றிக்கொள்ளும் மருத்துவப் படையாச்சி.........வீரமிகு வன்னியகுலத்திலே வந்துதித்த சந்தர்ப்பவாதச் சாக்கடை....சமரசமற்ற கொள்கை அரசியலை சந்தர்ப்பவாதச் சாக்கடைக்குள் தள்ளிய பெருமைக்குரிய மருத்துவர் தமிழ்க்குடிதாங்காத தமிழ்க்குடிதாங்கி! யாரை எதற்காக எதிர்த்து அரசியல் செய்யவேண்டுமே அவர்களோடே தம் தேவைக்குதந்த படி கூட்டு வைத்துக்கொண்டு ஈழத்திற்க்காய் எந்நேரமும் பாடுபடும் திரு.வைகோ அவர்கள்....அவரும் சிறை சென்றார்.

யார் நமக்கு எதிரி?

ஈழப்போராட்டம் பல படிநிலைகளைக்கொண்டது, தந்தை செல்வாவில் ஆரம்பித்து, பல்வேறு போராளிக்குழுக்களில் தொடங்கி புலிகளால் வலுப்பெற்றது. மற்ற போராளிக்குழுக்களிலிருந்து புலிகளின் கைகளுக்கு முழுதும் மாறியதெப்படி?  இந்தியப்பெருந்தலைவர் இந்திராகாந்தி அவர்கள் எல்லா போராளிக்குழுக்களையும் ஆராய்ந்து புலிகள் தான் எல்லோரிலும் வலுவானவர்களாகவும் , சரியான சிந்தனைப்போக்குடையவர்களாகவும் இருப்பதாக தீர்மானித்தார்கள். அதனால் விடுதலைப்புலிகளுக்கு கூடுதல் ஆயுத பலம் மட்டுமல்ல , தார்மீக ஆதரவுத்தளமும்  கிடைத்தது.  தமிழகத்தில் எம் ஜி ஆர் அவர்களுமே விடுதலைப்புலிகளை நம்பிய அளவிற்கு மற்ற குழுக்களை நம்பவில்லை. ஏன் கலைஞர் கூட சகோதர யுத்தம் வேண்டாம் வேண்டாமென தலையில் அடித்துக்கொண்டாரே தவிர ஒரு சந்தர்ப்பத்தில் கூட புலிகளை இடித்துரைத்தாரில்லை. தனது இறுதிக்காலம்  வரை சகோதர யுத்தத்தினால் தான் புலிகள் வீழ்ந்தார்களென்பதை உறுதியாக நம்பினார். அதற்காக புலிகளை வெறுத்தாரா என்றால் ஒருகணமும் வெளிப்படையாக அவர் சொன்னதில்லை.  புலிகளால் அவர்களது மிதமிந்திய ஹீரோயிசத்தால் அதிகம் இழந்த அரசியல் கட்சி ஒன்று உலகில் இருக்குமானால் அது திமுக தான். இல

L(J)OKPAL , 'HINDI'ANS & INDIANS

These are all some bundle of tweets i tweeted recently. to follow my tweets click https://twitter.com/#!/mathibalaa  , for better understanding i also included some of the replies received. # annahazare  May 2015,Press:where is this year's annual fasting? Kejiriwal:due to Mumbai is humid and Delhi too hot fasting will be at Ooty. punbali   Puneet Bali   @   @ mathibalaa   # teamanna  n  @ thekiranbedi  take up membership at mahindra holidays so that de can chnge fast venue evryear! Sasikala out , From Now onwards Milk River ( athampa Paalaru) and Honey River( Athmappa Thenaru) will flood in Tamilnadu.! # lokpal  is another bill similar to reservation for ladies bill ! it always prevail but will never actually executed.  # teamanna @ say_satheesh  BY THE WAY...I REALLY WANT TO KNOW WHO IS OUR பொதுபணித்துறை அமைச்சர்??? say_satheesh   Satheesh Kumar   @   @ mathibalaa  who knows? Web site having previous data:) @ say_satheesh  really pity to learn about tamil