
நடுங்கும் குளிரில் போட்டிருந்த ஸ்வெட்டரையும் மீறி தன் குழந்தைக்கு குளிருமோ என்ற கவலையிலேயே வாசலைப் பார்த்தவாறு இருந்தாள் அவள் ,
அவன் அப்போதுதான் இரண்டு ரவுண்ட் தாண்டியிருந்தான். “
போதுண்டா , நேத்தே வீட்ல பிரச்சினைன்னு சொன்னியே , இன்னிக்காவது நேரத்துல போடா” என்றான் நண்பன்…“இன்னும் ஒரே ரவுண்டு’’ என்றபடியே ஊற்ற ஆரம்பித்திருந்தான் அவன்.
“என்ன இப்படி குடிச்சிட்டு அர்த்த ராத்திரியில வர்றீங்க? இன்னிக்கு செக்கப் போகணும்னு சொல்லியிருந்தேனே?” என்றபடியே விசும்ப ஆரம்பித்திருந்தாள் அவள்….
“ ஆபிஸ்ல டென்சன் , சும்மா தொண தொண ன்னு பேசாம கொஞ்சம் சோத்த போடறியா?” சிடுசிடுத்தான் அவன்……
“நான் டாக்டர்கிட்ட அப்பாயிண்ட்மெண்ட் பிக்ஸ் பண்ணியிருந்தேன் , நாளைக்கு போனா சத்தம் போடுவாங்க , என்ன இப்படி பொறுப்பில்லாம இருக்கீங்க? “ அவள்.
“நாளைக்கு நான் உன்னை கூப்பிட்டு போறேன்னு யார் சொன்னா? எனக்கு வேலை இருக்கு , நீ ஆட்டோல போய்ட்டு வா…உனக்கு சேவகம் பண்றதுக்கா ஆபிஸ்ல சம்பளம் கொடுக்கறாங்க…?”
அடுத்த ரவுண்டும் ஆயிற்று. அவன் நண்பனின் வற்புறுத்தலால் நகர விருப்பமில்லாதவனாக நகர்ந்தான் அவன்.
அது ஒரு தைப் பொங்கல் தினம் , வீட்டில் நண்பிகளுடன் திரைப்படம் பார்க்கபோவதாக சொல்லிவிட்டு வந்திருந்தாள் அவள். இராமநாதபுரத்தில் ஐந்தாம் நம்பர் பேருந்து ஏறி சுங்கம் வந்து இறங்கிய அவளை தனது ஹீரோ ஹோண்டாவில் ஏற்றிக்கொண்டு பைக்கில் பறந்து கொண்டிருந்தான் அவன் , இராமநாதபுரத்தில் பைக்கில் ஏறினால் யாரும் பார்த்துவிட வாய்ப்புண்டு என்ற காரணத்தால் இப்படியான ஒரு ஏற்பாடு.
“ சத்யா , எப்ப நம்ம விசயத்தை வீட்ல சொல்லலாம்னு இருக்கே? “
“ அக்கா கல்யாணம் இன்னும் ஒரு மாசத்துல இருக்கு அன்பு , முடிஞ்சதும் அக்கா மூலமாவே வீட்ல சொல்லி சம்மதம் வாங்கிடலாம்னு நெனைக்கிறேன்….நீங்க எப்படி? “
“ எங்க வீட்ல அப்பா மட்டும்தானே , நான் சமாளிச்சுடுவேன் , உங்க வீட்டு சம்மதம் தான் உடனடித்தேவை.”
ஒரு வருடமும் , சில மாதங்களும் மிகச் சந்தோசமாகக் கழிந்தது. ஒரு நீண்ட தேனிலவாகவே அவர்களது மதுரை வாழ்வும்
இந்த ஒரு பத்து நாளாக ஏன் இவன் இப்படி நடந்து கொள்கிறான் என்று புரிபடவேயில்லை அவளுக்கு . அவன் எப்போதும் குடிப்பவன் தான் , சனியிரவில் தன் கையாலேயே விஸ்கியில் சோடாவைக் கலக்கி நிறைய முறை கொடுத்திருக்கிறாள் அவள். ஆனால் வெளியே தனியே குடித்துக் கொண்டு வருவது இந்த இரண்டு வாரங்களாகத் தான். ஆபிஸில் என்ன பிரச்சினையோ தெரியவில்லை என்ற அங்கலாய்ப்பே அதிகமிருந்தது அவளிடம்.
டாக்டர் வந்துவிட்டார்.
ஏம்மா தனியாதான் வந்தியா? அன்பு வரலை ? கொஞ்சம் கூட பொறுப்பில்லாம இருக்காரே? என்று கடிந்தவாறு தேவையான மருந்துகளையும் எழுதிக் கொடுத்தார் டாக்டர். மீண்டும் ஆட்டோ பயணத்தில் வீடு வந்து சேர்ந்து “அன்பு”விற்காக காத்திருந்த போதுதான் இந்த கதையின் முதல் பகுதி ஆரம்பித்திருந்தது.
“ மிஸ்டர் அன்பு , வீட்ல யாரும் பெண்கள் இல்லையா ? ஏன்னா , சத்யா நிறைய சாப்பிடணும் ,நல்லா வாக்கிங் போகணும் , எவ்வளோ தடவ சொல்லியிருக்கேன் , கூட நீங்க இருந்து கவனிச்சுக்கலாமே ? இல்ல நீங்க பகல்ல ஆபிஸ் போகணும்னா அவுங்க அம்மாவையாவது கவனிச்சுக்க சொல்லலாமே? இல்லாட்டி கண்டிப்பா டெலிவரி டைம்ல ப்ராப்ளம் ஆகிடும்” என்றார்..
“இல்லங்க , , என்னால தனியாவே சமாளிச்சிக்க முடியும் , உங்களால என்ன ஒண்ண்ரை வருசமா பாத்துக்க முடிஞ்சதே , இதுவரைக்கும் நான் செத்தேனா , பொழைச்சேனான்னு வந்து பாத்திருப்பாங்களா? நீங்க அங்க போயி அவமானப் படுறதை என்னால தாங்க முடியாது…” வீறாப்பாகச் சொல்லிவிட்டாள் அவள் எவ்வளவோ எடுத்துச் சொல்ல முயற்சித்தும்.! அடுத்த நாள் அலுவலகத்திலும் விடுமுறைக்கு முயற்சித்துத் தோற்றான் அவன்………
கொஞ்சம் கஷ்டமாகத்தான் இருக்கும். அவனின் அவமானமும் , வேறெந்த ஈகோவும் தடையாயிருக்கவில்லை , தொலை பேசியில் அம்மாவை அழைக்க….
“அம்மா…….” என்றழைத்து அதற்கு மேல் என்ன சொல்வதென்றே தெரியாமல் நிறுத்தினாள் அவள்
“சத்திக்குட்டி…….நீயாடா கண்ணு? நல்லா இருக்கியா” தளுதளுத்த குரலில் அம்மா…..
“நல்லா இருக்கேன்மா , என்ன மறந்துட்டியா?” சத்யா
“என்ற உசுர ஊட்டி வளத்த உன்ன மறப்பனா கண்ணு? அப்பாவோட பழைய நண்பர் மதுரைலதான் இருக்காரு…… ? கண்ணன் மாஸ்டர் , அவர்கிட்ட விசாரிக்குவோம்….! டாக்டர்கிட்ட போனியா கண்ணு ? எப்ப டேட் கொடுத்திருக்காங்க? " அம்மா
தன்னைப் பற்றி கவலைப்பட்ட பெற்றோரை தான் எண்ணியே பார்க்கவில்லை என்ற குற்றவுணர்வு இருந்தாலும் இயல்பிலேயே இருந்த ஈகோ காரணமாக காட்டிக்கொள்ளவில்லை அவள் “
"ஏம்மா , நான் முழுகாம இருக்கேன்னு தெரிஞ்சபிறகும் பார்க்க வரணும்னு தோணவே இல்லியாமா?”
“தோணாம இருக்குமா கண்ணு ? ஆனா , உங்கப்பாவ பத்திதான் தெரியுமே உனக்கு? உன்ன மாதிரிதானே ? வறட்டுக் கெளரவ்ம் பாக்கிறவர் , நான் செஞ்சது தப்புன்னு சொல்லி நீ வந்து கால்ல விழுந்தாதான் நீ போகணும்னு ஒத்தக் கால்ல நின்னுட்டார்….நான் என்ன செய்வேன் ? “ அழுக ஆரம்பித்திருந்தார் அம்மா….
“எப்போ அம்மா வர்றே , அப்பா ஒண்ணும் சொல்ல மாட்டாரா? “ சத்யா உண்மையான எதிர்ப்பார்ப்புடன் கேட்டாள்.!
“நாளைக்கே வர்றேம்மா , அப்பாவை நான் சமாளிச்சுக்கிறேன் “ அம்மா சொன்னார்.
அடுத்த நாள் , அலுவலகத்தில் நண்பன் சரியாகவே பேசவில்லை –
“ நீயெல்லாம் ஒரு மனுசனாடா ? உன்னக் காதலிச்சதுக்காக உன்ன நம்பி வந்த பொண்ணை இப்படி நிறை மாசத்துல அலைக் கழிக்கறையேடா ? இது நியாயமா? “
“ மாப்ளே , நீயுமாடா என்னைப் புரிஞ்சிக்கல? என் பொண்டாட்டியப் பத்தித் தான் தெரியுமில்லே ? சரியான பிடிவாதம்! ஆபிஸ்ல லீவும் இல்லை , அதனால என்னாலயும் அவளை சரியா பாத்துக்க முடியலை , அவளும் அவுங்கம்மாவ உதவிக்கு கூப்பிட மாட்டேன்னு பிடிவாதமா இருக்கா , எவ்வளவோ சொல்லிப் பாத்துட்டேன் , கேக்க மாட்டேங்கிறா ….
நான் என்ன பண்ண ? அதனால தான் ஒரு வாரமா வேணும்னே இப்படி பண்ணறேன் , அதுக்கப்பறமாவது அவுங்க அம்மாவை உதவிக்கு கூப்பிட சம்மதிப்பாளான்னு பாக்கறேன்… கொஞ்சம் கஷ்டமாத்தான் இருக்கு , ஆனா , யாரும் உதவிக்கு இல்லாம அவ தனியா கஷ்டப்படறத சகிக்க முடியலைடா ,”
மாமனாரும் , மாமியாரும் வீட்டில் இருந்தார்கள்…யோசனை பலித்ததுடன் மனைவியின் கஷ்டம் தீர்ந்த சந்தோசத்துடன் அவர்களை வரவேற்றான் , அவர்கள் முன்னிலையில் எப்போதும் போல பேசிய அவள் இரவுணவை முடித்த பின் அறைக்கு வந்து படுத்திருந்தாள்….
அவள் ஏதும் பேசவில்லை , பேசுவதாகவுமில்லை அவள்……அதில் அவளது கோபத்தை அவனால் உணர்ந்து கொள்ள முடிந்தது.
அவனும் மெளனமாயிருந்தான் !!!!! ஆனால் அதில் அர்த்தமிருந்தது.!!!!!!!!!!!
Comments