Skip to main content

அது ஒரு அழகிய நிலாக்காலம்..!!!!

இன்று கோட் சூட் அணிந்து , வியாபார நிமித்தமாக , சற்றே சிதருண்ட காபியையும் டிஷ்யூவால் துடைத்து , நுனி நாக்கு ஆங்கிலம் பேசி ஊரை ஏமாற்றுகின்ற சமயத்தில், விலகிய உடுப்புக்களை சரி செய்யும் போதெல்லாம் என்னையும் அறியாமல் அந்நாளைய நினைவில் மெல்லியதாக சிரித்துக் கொள்வேன். பழைய நினைவுகளை நினைத்து...!!!

அத்தகைய நிகழ்வுகளில் ஒன்று......!!!

அரசியல் , பதிவரசியல் , நுண்ணரசியல் இவைகளைத் தள்ளி வைத்துக் கொண்டு ஒரு பின் நோக்கிய பயணம் , என் வாழ்வில் - சற்றேறக்குறைய 15 முதல் 20 ஆண்டுகளுக்கு பின்னே பயணிக்கிறேன்...!!


அது என் ஆறாம் வகுப்பு என்று நினைக்கிறேன்......எங்கள் கிராமம் கோவையிலிருந்து ஒரு இருபது கிலோ மீட்டர் தள்ளி நகரத்துக்கும் சேராமல் , கிராமத்துக்கும் சேராமல் நகர்புரத்தின் சிற்சில வசதிகளோடு இருந்த கிராமம்...."கலங்கல்" - கேள்விப்பட்டிருக்கிறீர்களா ??? தெரியாதவர்களுக்கு நடிகர் சிவக்குமார் சிறுவயதில் வாழ்ந்த ஊர் , ஜி.டி நாயுடு பிறந்த ஊர் என்றால் தெரியும்...!! அப்படியும் தெரியவில்லையா ? ரொம்ப ரிஸ்க் எடுக்க வேணாம் , மதிபாலா பிறந்த ஊர்...!!!ஹிஹிஹி..

என் வீட்டிற்கு அருகே பெருமாள் கோயில் ஒன்று இருக்கிறது...அதற்கு சொந்தமான பல ஏக்கர் நிலங்களும் இருந்தது...பிற்கு நம்மூர் மக்கள் கொஞ்சம் கொஞ்சம் அதை அபகரித்து அதை தமக்கு சொந்த நிலங்களாக்கிக்கொண்டதும் , அந்தக்கோயிலுக்கு சொந்தமாக ஊர் மக்கள் வெட்டி வைத்த தெப்பக்கிணறு அந்த நிலங்களை அபகரிததவர்களுக்கு சொந்தாமாகிப்போனதும் அரசாங்கம் கவனிக்க வேண்டிய விஷயமாக இருந்தாலும் அது நான் சொல்ல வந்த விசயத்திற்கு சற்றும் சம்பந்தமில்லாதது.....

அங்கேதான் நான் நீச்சல் பழகினேன்...இன்றெல்லாம் நீச்சல் பழக பலவித அளவுக்ளில் டியுப்களும் , வசதிகளும் வந்து விட்டன...அன்றெல்லாம் கற்றாழை முட்டிதான்........ஊருக்கு நாலைந்து இருக்கும்...நீச்சல் பழக நினைத்துவிட்டால் அந்த கற்றாழை முட்டி வைத்திருப்பவர் திடீர் தெய்வமாகி விடுவார்......

என் பக்கத்து வீட்டில் மீசை ஜெயப்பிரகாஷ் ( காரணப்பெயர் - அவர் சிறுவயதில் ஒழுகும் மூக்கை துடைப்பது மீசை போலவே இருக்குமாதலால் அந்த பெயராம்!). ! அவர் நீச்சலில் கெட்டிக்காரர்....நான் தினமும் அவரிடம் சென்று நச்சரிப்பேன்...அவர் வைத்திருக்கும் கற்றாழை முட்டி வேண்டுமென்று....அவரோ அதை தர ஏனோ தயங்கினார்..!! ஒரு நாள் அதிசயமாக அவர் என்னை அழைத்துக்கொண்டு தெப்பக்கிணறு கூட்டிப்போனார்.....!!

நானும் ஆவலாய் அவருடன் சென்றேன்....அங்கே சென்று நீச்சலுக்காக தண்ணீரில் இறங்கினேன் ...அவரும் பொறுப்பாக எனக்கு நீச்சலைப் கற்றுக்கொடுக்க ஆரம்பித்தார்....அல்லது அப்படித்தான் நான் நினைத்தேன்...கொஞ்ச நேரம் கழித்து என்னை அவரும் அவர் நண்பரும் சேர்ந்து தூக்கிப்பிடித்து விளையாடினர் பாருங்கள் எனக்கு மூச்சுப்போய் மூச்சு வந்தது.......அவர்களுக்கு அன்றைய பொழுது விளையாட்டாய் போனது...எனக்கு உயிர் போய் உயிர் வந்தது.....என் அப்பா என்னை அன்று அடித்த அடி எனக்கு இன்றும் நன்றாக நினைவிருக்கிறது.......எப்படியோ அடுத்து வந்த நாட்களில் நீச்சலும்பழகிவிட்டேன்...அதற்குப்பிறகுதான் அந்த சுவாரஸ்ய நிகழ்வு!!

கொஞ்ச காலம் கழித்து நீச்சலில் புலியாகி விட்ட தம்பி ( அப்படித்தான் என்னை இன்றும் என் கிராமத்தில் அறிவார்கள்,, என் வீட்டிலும் கூட!!!) தன் நண்பர்களை கூட்டிக்கொண்டு நீச்சலடிக்க சென்றான்...!!

தெப்பக்கிணறு போய் போரடித்து விட்டதாக புலம்பினார்கள் நண்பர்கள்.....நான் சொன்னேன்..."சரி வாங்கடா - தாய் தோட்டக்கிணறு போவோம் என்றேன்...

அப்போதெல்லாம் , பத்து நண்பர்கள் குளிக்கப் போனால் கிணற்றை நாசப்படுத்திவிட்டுத்தான் வருவார்கள், அதுமட்டுமன்றி தாய் தோட்டக்கிணறு குடிநீருக்கும் பயன்படும் என்பதால் , தோட்டக்காரர் யாரையும் நீச்சலடிக்க அனுமதிக்க மாட்டார்...... நண்பன் ஒருவன் அப்போதே சொன்னான்..."டேய் அந்த கெணத்துக்காரன் கொஞசம் கோவக்காரன்......அடிச்சிடுவான்னு....."

இருந்தாலும் ஒரு குருட்டு நம்பிக்கையில் அங்கே போனோம்..ஒரு கிலோமீட்டர் இருக்கும் என் வீட்டிலிருந்து அந்தக்கிணறு...அங்கே சென்றால் அந்த தோட்டாக்காரர் - பேரு ரங்கேகவுண்டர் - மாடுகளுக்கு மேவு போட்டுக்கொண்டிருந்தார் ( தீவனம் ) ...அவர் செல்லும் வரை காத்திருந்தோம்...

மேவு போட்டுவிட்டு மங்களுர் கணேஷ் ஒன்றை எடுத்து பற்ற வைத்தபடியே தனது ராலி மார்க் சைக்கிளை எடுத்துக்கொண்டு அழுத்த ஆரம்பித்தார்.....க்ரீஸ் போட்டு ஒரு பத்தாண்டு காலம் ஆயிருக்கும் போல...சைக்கிள் வீலின் தரையில் உராயும் சத்தத்தைக்கூட சைக்கிள் செயின் சத்தம் விழுங்கியிருந்தது.!!!அவர் தலை மறைந்தவுடன் எங்கள் உடைகளை கழற்றி விட்டு ( மொத்தமாகத்தான் .... ) தண்ணீரில் குதித்தோம்!!!!

ஒரு ஒரு மணி நேரம் குதித்தாடி விட்டு மேலே வந்த எங்களுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி!!!!

நாங்கள் வைத்திருந்த இடத்தில் துணியைக்காணோம்..எங்கே என்று தேடியபோதுதான் க்ரீச்சிட்டு சென்ற சைக்கிள் தன் இடத்தில் அமைதியாய் நின்றிருந்ததைப் பார்த்தோம்...தோட்டக்காரர் வந்து விட்டார் என்று அப்போதுதான் உரைத்தது....நாங்கள் துள்ளி விளையாடிய மும்முரத்தில் சைக்கிளின் சத்தம் கேட்காமல் விட்டிருந்தது போலும்.

என்ன செய்வது உடம்பில் ஒட்டுத்துணி இல்லை....

நாங்கள் வெளியே வந்ததை பார்த்து விட்ட அவர் சாட்டை வார் ( வண்டி ஓட்டும்போது மாடுகளை அடிக்க பயன்படுவது - ஒரு குச்சியின் முணையில் நைல்லான் க்யிறு கட்டப்ப்ட்டிருக்குமே அது!!) எடுத்துக்கொண்டு அடிக்க வந்தார்......

என்ன செய்வதென்றியாமல் ஓட ஆரம்பித்தோம்!!!!! கொஞ்ச நேரம் ஓடி களைத்து விட்டார் அவர்...ஆனோ நாங்கள் நிற்கவில்லை......வீடு வந்துதான் உடம்பில் துணியில்லை என்பது நினைவிற்கே வந்தது...அதற்கு பிறகு அப்பாவிடம் அதற்காக அடி வாங்கினேன் என்பது தனிக்கதை!!

என்னதான் இப்போதெல்லாம் நீச்சல் குளத்தில் நீச்சலடித்து சாய்வு மேஜையில் சாய்ந்து படித்தாலும் , தெப்பக்கிணற்றிலும் , தாய் தோட்டக்கிணற்றிலும் நீச்சலடித்த உணர்வும் வருவதில்லை........குஷியும் வருவதில்லை...!!

Comments

Popular posts from this blog

பூட்டிய இரும்புக்கூட்டின் கதவு திறக்கப்பட்டது!

சீமான்களின் சபையினிலேயே , கடிதம் எழுதி எழுதிக் களைத்துப்போனதோர் கிழட்டுச் சிங்கம்.....முன்னாலுக்கும் முன்னால் அவர் கொண்ட தமிழ்ப்பற்று.....இன்னாளில் அது தமது மக்கட்பற்றாய் மாறிப்போனதொரு சோகம். ஏதோவொரு புண்ணியத்தில், எவரோ செய்த வரலாற்றுத் தவறால் , கொள்கை , தொலைநோக்கு , மக்கட்பற்று இவை பற்றிய சிந்தையேதுமின்றி அரசியலில் விபத்தாய் விளைந்த கொடநாட்டு ஈழத்தாய்....தேர்தலுக்குத் தேர்தல் மட்டுமே தமிழர் பற்றியும் , தமிழர் அரசியல் பற்றியும் எழுதி வைத்துப் பேசும் செல்வி யவர்.........இன்னமும் அவர் சேலை பிடித்துத்திரியும் வீணர் கூட்டம்.! கூட்டணிக்கேற்றப்படி கொள்கையை மாற்றிக்கொள்ளும் மருத்துவப் படையாச்சி.........வீரமிகு வன்னியகுலத்திலே வந்துதித்த சந்தர்ப்பவாதச் சாக்கடை....சமரசமற்ற கொள்கை அரசியலை சந்தர்ப்பவாதச் சாக்கடைக்குள் தள்ளிய பெருமைக்குரிய மருத்துவர் தமிழ்க்குடிதாங்காத தமிழ்க்குடிதாங்கி! யாரை எதற்காக எதிர்த்து அரசியல் செய்யவேண்டுமே அவர்களோடே தம் தேவைக்குதந்த படி கூட்டு வைத்துக்கொண்டு ஈழத்திற்க்காய் எந்நேரமும் பாடுபடும் திரு.வைகோ அவர்கள்....அவரும் சிறை சென்றார்.

நண்பர் 'டோண்டு' ராகவன்...

உயிரோடு இருக்கும்வரை அறிக்கைகளால் அர்சித்து எதிர்ப்பரசியல் நடாத்தி செத்துபோன பிறகு ஆருயிர் நண்பர் என்று அழைத்துக்கொள்ளும் எல்லா அரசியல்வாதிகளையும் போலவே நான். எனக்கும் மறைந்த உயர்திரு 'டோண்டு' ராகவன் அவர்களுக்குமான பரிச்சயம் அவ்வளவொன்றும் அதிகமில்லைதான். பதிவுலகையும் , பர்ஸனல் லைப்பையும் பிரித்து வைத்துக்கொள்ளும் எண்ணமுடைய நான் , டோண்டு மட்டுமல்ல மற்றபல பதிவுலக நண்பர்களுடனும் கூட தனிப்பட்ட தொடர்புகளை வைத்துக்கொண்டதில்லை... இருந்தாலும் , அவ்வப்போது பதிவுலக பின்னூட்டங்களின்பாலே தொடர்ந்துகொண்டிருந்த தொடர்பு , எனது 'போலி டோண்டு' பற்றிய கட்டுரையொன்றிலேயே  தீவிர விவாதமாக மாறியது.. ஆயிரம் விமர்சனங்கள் அவர் மீதோ இல்லை அவர்தம் பிற்போக்கான கருத்துக்கள் மீதோ இருந்திருக்கலாம். கடினமாக ஓரிரு முறை பேசியிருக்கலாம்.. அத்தனையும் தாண்டி அவர் மிக நல்ல மனிதர் , கடும் உழைப்பாளி என்பதை அவரது பதிவுலகம் மூலமாக அறிந்தவனெனினும் உறுதியாக கூறவியலும்.. அத்தகைய நல்ல மனிதரை இழந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கும் , நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்... வருத்தங்கள

எஸ்.எஸ்.பொன்முடி - மனிதருள் மாணிக்கம்.

எஸ்.எஸ்.பொன்முடி , கொங்குச்சீமையிலே குறிப்பாக பல்லடம் , சூலூர் வட்டாரத்தில் தெரியாதவர்கள் சொற்பமே. எஸ்.எஸ். பொன்முடி அவர்கள் மட்டுமல்ல , அவர்களது குடும்பமே சூலூரில் பழம்பெருமை மிக்க குடும்பம். காலங்காலமாக அவர்களது குடும்பத்தினரே சூலூரின் அனைத்து தேர்தல்களிலும் வென்றதும் , வெல்வதும் வரலாறு. பாரம்பரிய திமுக குடும்பத்தைச் சேர்ந்தவராயினும் மாற்றுக்கட்சியினராலும் மதிக்கப்படும் சில மனிதர்களில் எஸ்.எஸ் பொன்முடியும் ஒருவர். அவருக்கும் , எனக்குமான பரிச்சயமொன்றும் அவ்வளவு அதிகமில்லைதான். அப்போது எனக்கு ஒரு பத்திலிருந்து , பதினைந்து வயதிருந்திருக்கலாம். கலங்கலில் கவுன்சிலர் தங்கவேலு சர்வ அதிகாரமும் பொருந்தியவராய் வலம் வந்துகொண்டிருந்தார். அவர் எஸ்.எஸ்.பொன்முடியின் வலக்கரம். ஊருக்கு மேற்கே ஜல்லிக்குழி என்ற மனிதர்கள் உபயோகப்படுத்த முடியாத , இயலாத பகுதி ஒன்றிருந்தது.....அப்போது கழகம் ஆட்சியிலிருந்தது + பொன்முடி எம்.எல்.ஏவாக இருந்தார். கட்சிக்காரர்கள் , குறிப்பாக ஒடுக்கப்பட்ட , மிக பிற்படுத்தப்பட்ட சமுதாய மக்கள் கேட்டுக்கொண்டதற்காக , மிகுந்த பிரயாசைப்பட்டு தங்கவேல் மற்றும் எஸ்.எஸ்.பொன்முடி அவ